
அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவினங்களுக்கு உச்சவரம்பு நிர்ணயிப்பது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் தேர்தல் ஆணையம் சார்பில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதில் தேர்தலின் போது அரசியல் கட்சிகள் செலவு செய்யும் தொகைக்கு உச்ச வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என பெரும்பாலான கட்சிகள் வலியுறுத்தின.
இந்த நிலையில் அரசியல் கட்சிகளின் கோரிக்கை குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான பரிந்துரைகள் விரைவில் மத்திய சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பப்பட உள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை வேட்பாளர்கள் செய்யும் தேர்தல் செலவுக்கு மட்டுமே உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.