”தேர்தல் ஆணையர்கள் நியமனங்கள் மிகவும் மர்மமானதாக இருக்கிறது” - உச்சநீதிமன்றம்

”தேர்தல் ஆணையர்கள் நியமனங்கள் மிகவும் மர்மமானதாக இருக்கிறது” - உச்சநீதிமன்றம்
”தேர்தல் ஆணையர்கள் நியமனங்கள் மிகவும் மர்மமானதாக இருக்கிறது” - உச்சநீதிமன்றம்

தேர்தல் ஆணையர்கள் நியமனங்கள் மிகவும் மர்மமானதாக இருக்கிறது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளக்கோரி தொடரப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த பதினெட்டாம் தேதி தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமிக்கப்பட்ட ஆவணங்களை தாக்கல் செய்ய, மத்திய அரசுக்கு நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தநிலையில் தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான ஆவணங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது மத்திய அரசு.

ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதிகள், “18-ம் தேதி நாங்கள் வழக்கை விசாரிக்கிறோம், அதே நாளில் அவருடைய பெயரைப் பிரதமர் பரிந்துரைக்கிறார். ஏன் இந்த விஷயத்தில் இவ்வளவு அவசரம். உங்கள் ஆவணங்கள் படி பார்த்தால் தேர்தல் ஆணையர் பதவி மே 15 முதல் காலியாக உள்ளது. மே 15 முதல் நவம்பர் 18 வரை நீங்கள் என்ன செய்தீர்கள் என எங்களுக்குக் காட்ட முடியுமா?. ஒரே நாளில் அதிவிரைவாக இந்த நியமனத்தை ஏன் செய்தீர்கள்?” என அடுக்கடுக்காக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

சில பதவிகளை நிரப்புவதற்கு அதிவிரைவாக முடிவெடுக்க வேண்டியது அவசியம் என்பதை நாங்கள் புரிந்து கொள்கின்றோம், ஆனால் மே மாதத்தில் இருந்து காலியாக இருக்கக்கூடிய பதவியை திடீரென இவ்வளவு அவசரமாக நிரப்ப வேண்டியது ஏன் என மீண்டும் அவர்கள் கேள்வி எழுப்பினர். மத்திய அரசு தாக்கல் செய்துள்ள ஆவணங்களின்படி பார்த்தால், தேர்தல் ஆணையர் பதவிக்கு நான்கு பெயர்கள் பரிந்துரையில் இருந்துள்ளது, இந்த நான்கு பெயரின் பரிந்துரையை எப்படி மேற்கொண்டீர்கள்?, அதில் ஒருவரை எப்படி தேர்வு செய்கிறீர்கள் என்பதை நாங்கள் வெளிப்படையாக தெரிந்து கொள்ள விரும்புகிறோம், இந்த கட்டமைப்பு பற்றி எங்களுக்கு மிகவும் அக்கறை இருக்கிறது என நீதிபதிகள் கூறினர்.

எந்த ஒரு தனிப்பட்ட நபர் குறித்தும் நாங்கள் எதிராக கருத்து கூறவில்லை, உண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த நபர் சிறப்பான நிர்வாக திறமை கொண்டவராக இருக்கிறார். ஆனால் எங்களது கவலை தேர்ந்தெடுக்கும் முறை எப்படி இருக்கிறது என்பது குறித்து தான் என நீதிபதிகள் விளக்கம் அளித்தனர். தேர்தல் ஆணைய பதவிக்காக பரிந்துரைக்கப்பட்ட நான்கு பேரில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கக் கூடிய நபர் தான் மிகவும் இளையவர். அப்படி இருக்கும் பொழுது அவரை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள் என்பதை நாங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறோம் என நீதிபதிகள் கூறியபோது, தேர்ந்தெடுக்கப்பட்ட நபரின் விவரங்கள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் இதற்கென்று உள்ள தனி இணையதளத்தில் உள்ளது. யார் வேண்டுமானாலும் அதனை பார்க்கலாம் என தெரிவித்தார்.

தலைமை ஆணையராக தேர்ந்தெடுக்கப்படுபவரின் பதவி காலம் ஆறு ஆண்டுகள் என நீங்கள் சொல்கிறீர்கள், தேர்தல் ஆணையர்களின் யார் மூத்தவரோ அவரே தலைமை தேர்தல் ஆணையராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் சொல்கிறீர்கள், ஆனால் விரைவாகவே ஓய்வுபெற போகக்கூடிய நபர்களை தேர்தல் ஆணையர்களின் பதவிக்கு தேர்ந்தெடுக்கிறீர்கள், இது ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக இருக்கிறதே என நீதிபதிகள் சந்தேகத்தை எழுப்பினர்.

பனி மூப்புஇ ஓய்வு பெறும் வயது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அடிப்படையாகக் கொண்டுதான் பெயர்கள் இறுதி செய்யப்படுகிறது என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கூறியபோது, அந்தப்பதிலில் நீதிபதிகள திருப்தி அடையாமல் இருந்தனர். எங்களது கேள்விக்கு நீங்கள் இப்பொழுதும் நேரடியான பதிலை தெரிவிக்கவில்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். நீங்கள் தேர்தல் ஆணையராக தேர்ந்தெடுக்கும் நபர்கள் ஆறு ஆண்டுகள் முழுமையான பதவியில் இருக்கும் நபராக இருக்க வேண்டும். ஆனால் அத்தகைய நபராக நீங்கள் யாரையும் தேர்ந்தெடுப்பதில்லை, தற்பொழுது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணையருடைய சம அளவில் இன்னும் சொல்லப்போனால் அவரைவிட பனி மூப்பு அதிகம் உள்ள நபர்கள் பலரது பெயர்கள் இருக்கிறது அப்படி இருக்கும் பொழுது, இந்த குறிப்பிட்ட நபரை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள் என மீண்டும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த விஷயம் மிகவும் மர்மமானதாக இருக்கிறது எனவும் நீதிபதிகள் கூறினர்.

அதற்குப் பதில் அளித்த மத்திய அரசு தலைமை வழக்கறிஞர், “அவர்கள் எந்த ஆண்டு அதிகாரி என்பது முதல் விஷயம். அவர்களது பிறந்த தேதி இரண்டாவது விஷயம். அந்த குறிப்பிட்ட பிரிவில் அவர்கள் எவ்வளவு சீனியர் என்பது மற்றும் பணியில் அவர்களது சர்வீஸ் உள்ளிட்டவை முக்கியமான விஷயம்” என தெரிவித்த போது நாங்கள் கடைசியாக உங்களிடம் ஒரே ஒரு முறை கேட்கிறோம், நான்கு பேரின் பெயர்களை எப்படி நீங்கள் பரிந்துரையின் இறுதிக் கட்டத்திற்கு கொண்டு வந்தீர்கள் என கேட்டார்.

அதற்கு மீண்டும் பழைய பதிலையே தலைமை வழக்கறிஞர் தெரிவித்தபோது, ஆறு ஆண்டுகள் தங்களது பதவி காலத்தை முழுமையாக நிறைவு செய்யாத நபர்களை, நீங்கள் தேர்தல் ஆணையராக தேர்ந்தெடுக்கிறீர்கள். இது பிரிவு 6-ஐ மீறுவதாக இருக்கிறது என நீதிபதிகள் திட்டவட்டமாக கூறினர்.

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் தன் தரப்பு வாதங்களை நிறைவு செய்ததற்குப் பிறகு மனுதாரர்கள் சார்பில் பிரசாத் பூஷன் மற்றும் கோபால் சங்கர் நாராயணன் ஆகியோர் வாதங்களை முன்வைத்தனர். தேர்தல் ஆணையர்களுக்கான பதவியை நியாயமான சட்டத்தின் படி ஆறு ஆண்டுகள் என்பது இருக்கிறது. ஆனால் 6 மாதங்கள் மட்டுமே பதவியில் இருக்கக்கூடிய ஒரு நபரை அரசு வேண்டும் என்று தேர்ந்தெடுப்பது ஏன்?. இப்படி இருந்தால் இந்த அமைப்பு சுதந்திரமான ஒரு அமைப்பாக இயங்குகிறது என்பதை எப்படி நம்புவது என கேள்வி எழுப்பினர்.

இதனை சரி செய்வதற்கு தன்னிச்சையாக இல்லாமல் வெளிப்படை தன்மையுடன் உரிய வழிமுறைகளை பின்பற்றி தெளிவாக தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆறு ஆண்டுகள் பதவி காலம் என்பது கட்டாயம் கடைபிடிக்கப்பட வேண்டும் என வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த பிறகு தீர்ப்பு தேதிக் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com