ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் நடத்தலாமா? - மார்ச் 4ல் தேர்தல் ஆணையம் ஆய்வு
இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ஜம்மு- காஷ்மீரில் தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆய்வு செய்யவுள்ளது.
காஷ்மீர் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப் படை கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி பால்கோட்டிலுள்ள பயங்கரவாத முகாம்களில் தாக்குதல் நடத்தியது. இதனால் இரு நாட்டு எல்லை பகுதிகளில் பதட்டம் நிலவி வந்தது. அத்துடன் எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் மறுபடியும் துப்பாக்கிச் சூடும் நடத்தி வருகிறது.
இந்நிலையில் இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் இதற்கான ஆயத்தப் பணிகள் குறித்து தேர்தல் ஆணையம் ஜம்மு-காஷ்மீரில் ஆய்வு செய்யவுள்ளது. அதன்படி வரும் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் தேர்தல் ஆய்வு நடத்தவுள்ளது. ஏற்கெனவே ஜம்மு- காஷ்மீர் மாநிலம் 2018 டிசம்பர் 20ஆம் தேதி முதல் குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் உள்ளது. தேர்தல் விதிமுறைகளின்படி மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட ஆறு மாதங்களுக்குள் அம்மாநிலத்திற்கு தேர்தல் நடத்தவேண்டும்.
இதனால் நாடாளுமன்றத் தேர்தலுடன் ஜம்மு- காஷ்மீரின் சட்டமன்றத் தேர்தலையும் சேர்த்து நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது. இதுகுறித்தும் ஆலோசனையும் தேர்தல் ஆணையம் நடத்தவுள்ளது. அதன்படி மார்ச் 4 ஆம் ஸ்ரீநகரிலும் மார்ச் 5 ஆம் தேதி ஜம்முவிலும் தேர்தல் ஆணையம் ஆய்வு நடத்தவுள்ளது. அத்துடன் அங்கு இருக்கும் அரசியல் கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தவுள்ளது.