உத்தவ் தாக்கரே, ஆதித்யா தாக்கரேவுக்கு புதிய சிக்கல்
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, அவரது மகனும் அமைச்சருமான ஆதித்யா தாக்கரே, மற்றும் தேசியவாத காங்கிரஸ் எம்.பி சுப்ரியா சூலே ஆகியோரின் தேர்தல் வேட்புமனு ஆவணங்களை ஆய்வு செய்கிறது மத்திய நேரடி வரிகள் ஆணையம்(சிபிடிடி).
மகாராஷ்டிராவின் ஆளும் கட்சிகளைச் சேர்ந்த மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, அவரது மகனும் அமைச்சருமான ஆதித்யா தாக்கரே, மற்றும் தேசியவாத காங்கிரஸ் எம்.பி சுப்ரியா சூலே ஆகியோர் தவறான தகவல்களை வழங்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அவர்களின் தேர்தல் வேட்புமனு வாக்குமூலங்களில் உள்ள விபரங்களை ஆய்வு செய்கிறது மத்திய நேரடி வரிகள் ஆணையம்.
“இந்த நடவடிக்கை வழக்கமானது. வருமான வரித்துறை, வாக்குமூலத்தில் கொடுக்கப்பட்டுள்ள வேட்புமனு ஆவண தகவல்களை குறுக்கு சோதனை செய்வது வழக்கமான செயல். தேர்தல் ஆணையம் மற்றும் வருமான வரித்துறை பொதுவாக தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றன. எனவே இந்த பிரச்னையில் புதிதாக எதுவும் இல்லை” என்று சிவசேனா செய்தித் தொடர்பாளரும், போக்குவரத்து அமைச்சருமான வக்கீல் அனில் பராப் கூறியுள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் “தேர்தல் ஆணையத்தின் வழக்கமான ஆய்வுதான். இது முதல் தடவையல்ல, பிரமாணப் பத்திரத்தில் உள்ள தகவல்கள் வருமானவரி வருமானத்துடன் ஒப்பிடப்படுகின்றன. இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், நாங்கள் அதற்கு பதிலளிப்போம்”என்றார்.
இந்த விஷயத்தில் குற்றச்சாட்டுகள் கண்டறியப்பட்டால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 125 ஏ இன் கீழ் சிபிடிடியால் வழக்குப்பதிவு செய்யப்படலாம். வாக்கெடுப்பு பிரமாணப் பத்திரங்களில் தகவல்களை வழங்கத் தவறிய அல்லது தவறான தகவல்களை வழங்கிய வேட்பாளர்களுக்கு அபராதமாக அதிகபட்ச ஆறுமாதம் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டையும் இந்த பிரிவு வழங்குகிறது.