குஜராத்தில் திட்டங்களை அறிவிக்க அவகாசம்: தேர்தல் ஆணையம் மறுப்பு
குஜராத் மாநிலத்தில் அரசு பல்வேறு திட்டங்களை அறிவிக்க வசதியாக சட்டபேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு தள்ளிப்போடப்பட்டதாக கூறப்படும் புகாரை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அங்கு இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவிருக்கின்றது. கடந்த தேர்தலை விட இம்முறை கூடுதல் வாக்கு மையங்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் தேர்தல் தேதி அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுவது குறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்த ஏ.கே.ஜோதி, இமாச்சலப் பிரதேசத்தில் கடுமையான குளிர்காலம் வரவிருப்பதால் தேர்தலை நவம்பர் 15 ஆம் தேதிக்கு முன்பே நடத்தவேண்டும் என கோரிக்கை வந்தது என்றும், அதனால் அங்கு தேர்தல் முதலில் அறிவிக்கப்பட்டதாகவும் தெளிவுபடுத்தினார். அதே நேரத்தில் குஜராத்தில் அதிகாரிகள் எல்லோரும் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருப்பதால் அவர்களால் தேர்தல் பணியில் ஈடுபடமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தேர்தல் அறிவிப்புக்கும், தேர்தல் அறிவிக்கைக்கும் இடையே 21 நாட்களுக்கு மேல் இடைவெளி இருக்கக்கூடாது என கடந்த 2001 ஆம் ஆண்டிலேயே தேர்தல் ஆணையமும், மத்திய சட்ட அமைச்சகமும் ஒப்புக்கொண்டிருப்பதாகவும், அதனால் அதற்கேற்ப குஜராத் மாநிலத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் ஜோதி விளக்கமளித்தார்.