7 மாநில தேர்தலுடன் பொதுத்தேர்தல் : 10 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டம் ?
மக்களவைத் பொதுத்தேர்தலுடன் 7 மாநில சட்டப்பேரவை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் 2014 ஆம் ஆண்டு 9 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை பொதுத்தேர்தலில் பாஜக தலைமயிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி தனித்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்நிலையில் பாஜக தனது 5 ஆண்டு கால ஆட்சியை வரும் மே மாதம் நிறைவு செய்கிறது. எனவே இந்தாண்டு நடைபெறும் மக்களவைத் பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தாண்டு மக்களவைத் தேர்தல் 9 முதல் 10 கட்டங்களாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது.
இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு மார்ச் மாதம் மூன்றாம் வாரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. அத்துடன் சட்டப்பேரவை பதவிக்காலம் நிறைவு பெறும் ஆந்திரம், ஒடிஸா, சிக்கிம், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் மக்களவைத் தேர்தலோடு நடத்தப்படும். மேலும் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை பதவிக்காலம் நிறைவு செய்யும் மகாராஷ்டிரா, ஹரியாணா மாநிலங்களுக்கும் சேர்ந்து தேர்தல் நடத்தலாம் என்று தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து வருகிறது. காரணம் இந்த இரு மாநிலங்களிலுமே பாஜக ஆட்சியில் உள்ளது. இந்த இரு மாநிலத் தேர்தலை மக்களவைத் தேர்தலுடன் சேர்ந்து நடத்தினால், தேர்தல் நடத்தும் செலவு சற்று குறையும். எனவே மக்களவைத் தேர்தலுடன் சேர்ந்து நடத்த வாய்ப்பு உள்ளதாக தேர்தல் ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுபோல ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சட்டப்பேரவை கலைக்கப்பட்டுள்ளதால் அங்கும் மக்களவைத் தேர்தலுடன் சேர்ந்து சட்டப்பேரவை தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இதனால் நடப்பு ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலோடு 7 மாநில சட்டப்பேரவை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது.