வாக்களிக்க வாக்குச்சாவடி சீட்டு மட்டும் போதாது - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
வாக்களிக்க புகைப்பட வாக்குசாவடி சீட்டுடன் உரிய அரசு அடையாள அட்டையையும் எடுத்து வரவேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் முனைப்புடன் செய்துவருகிறது. தேர்தலுக்காக இந்திய முழுவதும் உள்ள கட்சிகள் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை செய்து வருகின்றன. தேர்தல் ஆணையமும் அனைத்து கட்சி கூட்டங்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை ஆகியவற்றை செய்து வருகிறது. அத்துடன் வாக்காளர்களுக்கு சிறப்பு முகாம்களையும் நடத்திவருகிறது.
வாக்குப் பதிவு நேரங்களில் வாக்காளர்களுக்கு அரசு தரப்பில் வாக்குச் சாவடி சீட்டு கொடுக்கப்படும். இதனை, பல்வேறு அரசியல் கட்சியினரும் இந்த சீட்டினை வாக்காளர்களுக்கு கொடுப்பார்கள். இந்த வாக்குச் சீட்டை மட்டும் வைத்து கொண்டு சில நேரங்களில் வாக்களிக்க அனுமதித்துவிடுகிறார்கள்.
இந்நிலையில், புகைப்பட வாக்குச் சாவடி சீட்டை மட்டும் வைத்து வாக்களிக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதாவது வாக்களிக்க புகைப்பட வாக்குச்சீட்டுடன் அரசின் அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை வைத்திருக்க வேண்டும். உதராணமாக வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு போன்ற அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றைவைத்திருக்கவேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம் தரப்பில், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இது வலியுறுத்தப்பட்டுள்ளது.