நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமே உண்மையானது: தேர்தல் ஆணையம்
நிதிஷ்குமார் தலைமையில் இயங்கும் பிரிவே உண்மையான ஐக்கிய ஜனதா தளம் என தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் நிதிஷ் குமாருக்கே அதிக எம்எல்ஏக்கள் மற்றும் தேசியக் குழு உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதால் அதற்கு அங்கீகாரம் அளிப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் சில மாதங்களுக்கு முன் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி ஆதரவை முறித்துக்கொண்டு பாரதிய ஜனதா ஆதரவுடன் ஆட்சியை தொடர்கிறார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கட்சியின் மூத்த தலைவர் சரத் யாதவ், தாங்களே உண்மையான ஐக்கிய ஜனதா தளம் எனக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு சென்றார். இரு தரப்பும் தங்களுக்குள்ள ஆதரவு குறித்த ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியிருந்தன. இந்நிலையில் நிதிஷ்குமார் தலைமையில் இயங்கும் பிரிவே உண்மையான ஐக்கிய ஜனதா தளம் என தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது. தமிழகத்தில் அதிமுக மற்றும் இரட்டை இலைச் சின்னத்திற்கு உரிமை கோரி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பும் டிடிவி தினகரன் தரப்பும் மோதி வரும் நிலையில் அதே போன்றதொரு வழக்கில் தேர்தல்ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.