'அவருக்கு பெரிய மனசு...' - கேரளாவில் கொரோனா பணி போலீசாருக்கு உணவு விநியோகிக்கும் பாட்டி!
கேரளாவின் திருவனந்தபுரத்தில் வசிக்கும் பாட்டியொருவர், கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் காவல் துறையினருக்கு உணவுகளை விநியோகித்து வருகிறார். அவர் சேவை அளிக்கும் புகைப்படம், இணையத்தை கலக்கி வருகிறது.
திருவனந்தபுரம் எம்.எல்.எஸ் சந்திப்பில் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரிடம் 89 வயதான அந்தப் பாட்டி, தனது காரில் இருந்தபடி உணவு பொட்டலங்களை வழங்கியிருக்கிறார் என்று 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தியாளர் தகவல் பகிர்ந்துள்ளார். இதை பார்த்தப் புகைப்பட நிபுணர், அதை படம்பிடிக்க, அப்புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.
முன்னதாக, அந்த பாட்டியிடம் அவர் விவரங்கள் குறித்த பத்திரிகையாளர் கேட்டபோது, அவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை எனக் கூறியுள்ளார். தொடர்ந்து எவ்வளவோ வலியுறுத்தியும், "ஏன் இதையெல்லாம் கேட்கின்றீர்கள்? நீங்கள் என்ன என்னை திருமணம் செய்ய விரும்புகிறீர்களா?" என்று நகைச்சுவையுடன் கேட்டதுடன், தொடர்ந்து அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை என்பதில் உறுதியாக இருந்துள்ளார்.
இருப்பினும் அவர் புகைப்படம் இப்போது வைரலானதை தொடர்ந்து, அவரைப் பற்றிய சில விவரங்கள் தற்போது வெளிவந்திருக்கிறது. அதன்படி, பாட்டி பத்திணம்திட்டா என்ற பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. எனினும் பல ஆண்டுகளாக திருவானந்தபுரம் பகுதியில் வசித்து வந்திருக்கிறார். பல ஆண்டுளாக இங்கு வசித்து வரும் இவர், பல வழிகளில் தொண்டு செய்வதை தன் வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார்.
அதனால், அந்த பாட்டி இப்படி உதவுவது முதல் முறையல்ல என்று அவரின் பக்கத்து வீட்டுக்காரர்கள் கூறுயுள்ளதாக சொல்லப்படுகிறது. பாட்டியின் மருமகன், அவர் பற்றி பேசும்போது "பாட்டிக்கு பெரிய மனசு. தன்னலமற்ற சேவையைச் செய்யும் அனைவரையும் எப்போதும் மதிக்கும் தன்மை கொண்டவர். ஒவ்வொரு முறையும் நகரத்துக்குள் சென்றுவரும்போது ஏழைகளை அடையாளம் கண்டுகொண்டு அவர்களுக்கு உதவுவதை வழக்கமாக கொண்டுள்ளார்" என்று பகிர்ந்துள்ளார்.
பாட்டியின் உதவும் குணத்துக்காக, நெட்டிசன்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.