இந்தியாவை குறிவைக்கும் எல் நினோ! வெளியான அதிர்ச்சி அறிக்கை! வரப்போகும் ஆபத்துகளின் list இதோ!
எல் நினோ தாக்கத்தால் இந்தியா அதிகம் ஆபத்துக்குள்ளாகும் நாடாக WHO மதிப்பிட்டுள்ளது..
செய்தியாளர் : ஐடா அருட்செல்வி
பசிபிக் பெருங்கடல் பகுதியில் கடல் நீரின் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றமே எல் நினோ எனப்படுகிறது. இதன் தாக்கம் பசிபிக் கடல் பகுதியுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. உலகின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை, மழைப்பொழிவு உள்ளிட்ட வானிலையிலும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்.
உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள மதிப்பீட்டின்படி, இந்தியா அதிக சுகாதார ஆபத்தை எதிர்கொள்ளக்கூடிய நாடுகளில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் தெற்காசியாவின் சில பகுதிகளில் வழக்கத்தைவிட அதிக வெப்பமும், குறைவான மழைப்பொழிவும் பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை அதிகரிக்கும் நிலையில், பொதுமக்களுக்கு உடல் சோர்வு, அதிகப்படியான வியர்வை, நீரிழப்பு மற்றும் வெப்பப் பக்கவாதம் போன்ற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். குறிப்பாக நீண்ட நேரம் வெயிலில் வேலை செய்பவர்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டிய சூழல் உருவாகலாம்.
ஏற்கனவே இதய நோய், சுவாசப் பிரச்சினை அல்லது சிறுநீரக நோய் உள்ளிட்ட பாதிப்புகள் உள்ளவர்களுக்கு அதிக வெப்பம் கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, வெப்பம் அதிகமாக இருக்கும் நேரங்களில் வெளியில் செல்வதைத் தவிர்ப்பதும், போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும் முக்கியம்.
அதேபோல், மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்கள் கொசுக்கள் மூலம் பரவும் நோய்களின் பாதிப்பையும் அதிகரிக்கலாம். குறிப்பாக டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்களின் பாதிப்பு சில பகுதிகளில் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக WHO மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. டெல்லியில் இந்த ஆண்டு டெங்கு மற்றும் மலேரியா பாதிப்புகள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்தியாவில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பதற்கு எல் நினோ மட்டுமே காரணம் என்று கூற முடியாது. மழைப்பொழிவு, வெப்பநிலை, கொசுக்களின் பெருக்கம், தேங்கி நிற்கும் நீர் மற்றும் சுற்றுப்புறச் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் நோய் பரவலை அதிகரிக்கக் கூடும்.
இதற்கிடையில், சில பகுதிகளில் எதிர்பாராத கனமழை அல்லது வெள்ளம் ஏற்பட்டால் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் பாதிக்கப்படலாம். இதனால் குடிநீர் மூலம் பரவும் சில தொற்று நோய்கள் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கக்கூடும். மேலும், வானிலை மாற்றங்கள் உணவு உற்பத்தியில் பாதிப்பு மற்றும் குடிநீர் பற்றாக்குறை போன்றவற்றை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எல் நினோவால் ஏற்படக்கூடிய வானிலை மாற்றங்களை தொடர்ந்து கண்காணிப்பதுடன், அதற்கேற்ப சுகாதாரத் துறையினர் முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் என WHO வலியுறுத்தியுள்ளது. பொதுமக்களும் அதிக வெப்பம், நீரிழப்பு மற்றும் கொசுக்கள் மூலம் பரவும் நோய்களில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வானிலை மாற்றம் என்பது வெறும் வெப்பம் அல்லது மழைப்பொழிவில் ஏற்படும் மாற்றம் மட்டுமல்ல; அது நேரடியாக மக்களின் உடல்நலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், வரும் மாதங்களில் கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

