மகாராஷ்ட்ராவில் ஆளும் சிவசேனா கட்சியை சேர்ந்த அமைச்சர் உட்பட 12 எம்எல்ஏக்கள் திடீரென மாயாமாகி இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் சிவசேனா ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகாராஷ்டிரா சட்ட மேலவையில் காலியாக இருந்த 10 இடங்களுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் பாஜக சார்பில் 5 வேட்பாளர்களும், ஆளும் மகா விகாஸ் கூட்டணி சார்பில் 6 வேட்பாளர்களும் நிறுத்தப்பட்டிருந்தனர். இதில் பாஜக களம் இறக்கிய 5 வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் தலா 2 இடங்களிலும், காங்கிரஸ் ஓரிடத்திலும் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் பாஜக பெற்றிருக்கும் வெற்றியானது ஆளும் கூட்டணியை பெரிதும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
ஏனெனில், மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 106 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஆனால், அக்கட்சிக்கு ஆதரவாக 133 வாக்குகள் பதிவாகியுள்ளன. சுமார் 28 எம்எல்ஏக்கள் கட்சி மாறி பாஜகவுக்கு வாக்களித்ததன் காரணமாகவே, 5-வது எம்எல்சி இடத்திலும் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. இதில் சிவசேனாவை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள், பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்களித்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால் ஆளும் சிவசேனாவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
12 எம்எல்ஏக்கள் எங்கே?
இந்நிலையில், இந்த அதிர்ச்சியில் இருந்து சிவசேனா மீள்வதற்குள்ளாக, அக்கட்சியை சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உட்பட 12 எம்எல்ஏக்கள் இன்று காலை முதல் திடீரென மாயமாகியுள்ளனர்.
அவர்களின் செல்போன்கள் அணைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. அவர்களை மாநில போலீஸார் ரகசியமாக தேடி வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், அந்த எம்எல்ஏக்கள் பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த விவகாரம் குறித்து சிவசேனாவை சேர்ந்த எந்த தலைவரும் பதில் கூற மறுக்கின்றனர். சிவசேனாவை சேர்ந்த 12 எம்எல்ஏக்களை தங்கள் வசம் இழுப்பதற்காக ஒரு குறிப்பிட்ட கட்சி சதி செய்து வருவதாக பெயர் வெளியிட விரும்பாத சிவசேனா தலைவர்கள் தெரிவித்துள்ளனர். மேலவைத் தேர்தலை வைத்து பார்க்கையில், பாஜகவுக்கு ஆதரவாக 133 எம்எல்ஏக்கள் உள்ளனர். இன்னும் 12 எம்எல்ஏக்கள் இருந்தால் அக்கட்சியால் ஆட்சியமைக்கும் பெரும்பான்மை பலத்தை எட்டிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.