காவல்நிலையத்தில் அரைநிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்ட பத்திரிகையாளர்; வலுக்கும் எதிர்ப்பு

காவல்நிலையத்தில் அரைநிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்ட பத்திரிகையாளர்; வலுக்கும் எதிர்ப்பு

காவல்நிலையத்தில் அரைநிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்ட பத்திரிகையாளர்; வலுக்கும் எதிர்ப்பு
Published on

மத்தியப் பிரதேசத்திலுள்ள ஒரு காவல் நிலையத்தில் பத்திரிகையாளர் உள்டப சிலர் அரை நிர்வாணமாக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பலத்த எதிர்வினைகளை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வரக்கூடிய நிலையில் அக்கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் கேதார்நாத் சுக்லா என்பவர் குறித்து, சமூக வலைதள பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார் நீரஜ் குந்தர். அவர் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைதுக்கு எதிரான போராட்டம் ஒன்று நடந்திருக்கிறது. அந்தப் போராட்டத்தின் விஷயங்களை சேகரிக்க, பத்திரிகையாளர் கன்சிக் திவாரி என்பவர் சென்றுள்ளார். ஆனால் சென்ற இடத்தில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

போராட்டத்துக்கு சென்ற தன்னை காவல்துறையினர் கைது செய்ததாகவும், தன்னை அடித்து துன்புறுத்தி தனது உடைகளை கழற்ற செய்ததாகவும் பிறகு அங்கிருந்து காவல் நிலையம் வரை அடித்து இழுத்துச் சென்றதாகவும் அந்தப் பத்திரிகையாளர் கூறியுள்ளார். `சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராகவோ அல்லது காவல்துறையினருக்கு எதிராகவோ செய்தி வெளியிடக்கூடாது’ என தான் மிரட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளருடன் சேர்த்து அவருடைய ஒளிப்பதிவாளரை காவல்துறையினர் தாக்கியுள்ளனர். இவர்களுடன் சேர்த்து மேலும் 6 பேரும் இதே போன்று அரை நிர்வாணமாக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டு உள்ளனர். மேலும் காவல்துறையினர் பத்திரிகையாளரை வேண்டுமென்றே அவமானப் படுத்துவதற்காக அவரது அரை நிர்வாண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது அதுவே அவர்களுக்கு பெரும் பாதகமாக போய் முடிந்திருக்கிறது. அந்தப் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினராலும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றது. மத்தியப் பிரதேச அரசும், இது தொடர்பாக உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட காவல் துறையைச் சேர்ந்த முக்கிய காவலர்கள் மற்றும் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரஸ் கிளப் ஆப் இந்தியா, “அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட காலத்தில்கூட, பத்திரிகையாளர்கள் இந்த அளவு மிக மோசமாக நடத்தப்படவில்லை” என கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், `கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். மேலும் அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்’ எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி, `மாநிலத்தில் தற்பொழுது காட்டுமிராண்டி ஆட்சி நடைபெற்று வருகின்றது’ என கடுமையாக விமர்சித்துள்ளது.

இந்த விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விரைவில் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட கூடிய சூழலில், காவல்துறையினருடைய கடுமையான விதிமுறை மீறல்கள் மீண்டும் ஒருமுறை வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. `லாக் ஆப் டெத்’, `கஸ்டடியில் டார்ச்சர்’ என பல காட்டுமிராண்டித்தனம் செய்யப்படும் காவல்துறையில் உடனடியாக சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டியது அவசியமாகிறது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

2021 ஆம் ஆண்டு இன்டர்நேஷனல் ஜர்னலிசம் என்ற அமைப்பு உலகம் முழுவதும் 180 நாடுகளில் எடுத்த புள்ளி விவரங்கள் படி பத்திரிக்கை சுதந்திரம் சிறப்பாக உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவால் 142வது இடத்தை தான் பெற முடிந்திருக்கிறது. இதனால் பத்திரிகையாளர்களுக்கு மிக அச்சுறுத்தல் உள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா பார்க்கப்படுகிறது. அப்படியான ஒரு சம்பவம்தான் மத்தியப் பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

- நிரஞ்சன் குமார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com