நாடு முழுவதும் பக்ரீத் கொண்டாட்டம்: இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை
தியாகத் திருநாள் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள மசூதிகளில், சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது.
மும்பையில் உள்ள ஹமிதியா மசூதியில், ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகைகள் நடத்தி வருகின்றனர். மும்பை யில் உள்ள ஹமிதியா மசூதியில், அதிகாலையிலேயே திரண்ட இஸ்லாமியர்கள், மசூதியின் வாயிலின் முன்பு தொழுகை செய்தனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கானோர், பக்ரீத் தொழுகையில் ஈடுபட்டதை அடுத்து, காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
டெல்லியில் உள்ள ஜும்மா மசூதியில், லட்சக்கணக்கானோர் ஒன்றுகூடி சிறப்புத் தொழுகை செய்து பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடினர். மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, டெல்லியின் காஷ்மீர் கேட் பகுதியில் உள்ள பஞ்ச ஷரீஃப் தர்காவில், தியாகத் திருநாளையொட்டி நடைபெற்ற சிறப்பு தொழுகையில் கலந்துகொண்டார்.
மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலில் உள்ள இத்கா மசூதியில் திரண்ட பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள், சிறப்பு தொழுகைகள் செய்து ஒருவரையொருவர் கட்டியணைத்து வாழ்த்துக்களைக் பரிமாறிக் கொண்டனர்.