அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் பினராயி 'நட்பதிகாரம்'... யார் இந்த ரவீந்திரன்?!

அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் பினராயி 'நட்பதிகாரம்'... யார் இந்த ரவீந்திரன்?!
அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் பினராயி 'நட்பதிகாரம்'... யார் இந்த ரவீந்திரன்?!

கேரள கூடுதல் தலைமைச் செயலாளர் ரவீந்திரனை விசாரணைக்கு ஆஜராக, மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பியிருக்கிறது அமலாக்கத்துறை. முதல்வர் பினராயி விஜயனின் மிகவும் நெருக்கமான ரவீந்திரனின் பின்னணி கவனத்துக்குரியது.

கேரள தங்கக் கடத்தல் வழக்கு வெளியாகி 5 மாதங்களை நெருங்குகிறது. இன்னும் அதற்கு விடிவுகாலம் பிறக்கவில்லை. தோண்டத்தோண்ட பூதம் கிடைத்த கதையாக நாளொரு அதிர்ச்சி, தினம் ஒரு 'ஷாக்' என வெளிவரும் தகவல்கள் கேரள மக்களை திகைக்க வைக்கின்றன. தங்கக் கடத்தல் வழக்கில் கிடைத்த தகவல் மூலமாக போதைப்பொருள் பின்னணி, பினாமி பின்னணி கொண்டவர்களும் சிக்கி வருகின்றனர். கேரள மாநில சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணனின் மூத்த மகன் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த அதிர்ச்சி நீங்குவதற்குள், சிபிஎம் கட்சியின் முக்கியப் பிரமுகரும், கேரள முதல்வர் பினராயி விஜயனின் கூடுதல் தனிச் செயலாளரான சி.எம் ரவீந்திரனை அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது. ஏற்கெனவே, பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளரும், ஐஏஎஸ் அதிகாரியுமான சிவசங்கரை மத்திய அமலாக்கத் துறை கைது செய்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், தங்கக் கடத்தல் தொடர்பாக பினராயி விஜயனின் கூடுதல் தனிச் செயலாளரான சி.எம் ரவீந்திரனை கைகாட்டவே, இப்போது அவருக்கு வலை விரித்துள்ளது அமலாக்கத்துறை.

கடந்த 3 வாரங்களுக்கு முன்பே, ரவீந்திரனிடம் விசாரணை நடத்த அமலாக்க துறை தீர்மானித்து, நோட்டீஸும் அனுப்பியது. ஆனால், அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக சொன்ன முந்தையநாள் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரவீந்திரன். இதனால் அமலாக்கத்துறை விசாரணையில் பின்னடைவு ஏற்பட்டது.

சில தினங்களுக்கு முன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ரவீந்திரன் வீடு திரும்பினார். அப்போதும் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதுவரை இப்படி மூன்று முறை விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பிவிட்டது. ஆனால் ரவீந்திரன் மீண்டும் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இதனால் பினராயி விஜயன் அரசுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

யார் இந்த ரவீந்திரன்?!

கேரளாவில் சி.பி.எம் காலூன்ற காரணமான கோழிக்கோடு ஒஞ்சியம் கிராமம்தான் ரவீந்திரனின் சொந்த ஊர். பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள ரவீந்திரன் 40 வருடங்களுக்கு அந்தக் கிராமத்தில் பெட்டிக்கடை நடத்தி வந்திருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் ஒஞ்சியம் கிராமத்தின் சி.பி.எம் தலைவரான பி.வி குஞ்சிகண்ணன் என்பவருடன் பழகும் வாய்ப்புக் கிடைக்க, தானும் சி.பி.எம் கட்சியில் சேர்ந்திருக்கிறார் ரவீந்திரன். அவருடன் திருவனந்தபுரம் தலைமை அலுவலகம் சென்றுவர இருக்கும்போது, பெரிய தலைவர்களின் பழக்கம் கிடைக்க, இறுதியில் திருவனந்தபுரத்திலேயே செட்டில் ஆகிவிட்டார் ரவீந்திரன்.

கட்சியில் மிக முக்கிய பொறுப்பாளராகவும் பதவி வகித்துவரும் இவர், பினராயி விஜயனிடம் நெருங்கிப் பழகும் ஒரே நபர். பினராயி விஜயனின் நெருங்கிய நம்பிக்கைக்குரிய ரவீந்திரன், கடந்த பல ஆண்டுகளாக எல்.டி.எஃப் கூட்டணி ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் கூடுதல் தனிச் செயலாளராக பணியாற்றி இருக்கிறார்.

வி.எஸ். அச்சுதானந்தன் தலைமையிலான முந்தைய எல்.டி.எஃப் அரசில் சி.பி.எம் மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் உள்துறை அமைச்சராக இருந்தபோது, ரவீந்திரன் அவருக்கு தனிச் செயலாளராக இருந்தார். இதேபோல் சி.பி.எம் எதிர்க்கட்சியாக இருந்தபோதும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வி.எஸ்.அச்சுதானந்தனுக்கும் கூடுதல் தனிச் செயலாளர் ரவீந்திரன்தான். 2016-இல் பினராயி விஜயன் முதல்வரானபோதும் வழக்கம்போல ரவீந்திரன் தனிச் செயலாளர் ஆக்கப்பட்டார்.

வெறும் பத்தாம் வகுப்பே படித்த ரவீந்திரன், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு இணையான பதவியான தனிச் செயலாளர் பதவியை இத்தனை முறை அலங்கரித்து இருப்பதற்கு காரணமாக கைகாட்டப்படுவது பினராயி - ரவீந்திரன் இடையேயான நெருங்கிய நட்புதான் என்கின்றன கேரள ஊடகங்கள்.

ரவீந்திரன் வளைக்கப்படுவது ஏன்?!

பினராயி ஆட்சியில் ரவீந்திரன் ஆதிக்கம் அதிகம். முதல்வர் பினராயி விஜயனுக்கு பிறகு கேரள தலைமைச் செயலகத்தில் அதிக அதிகாரம் கொண்ட நபராக ரவீந்திரன் அறியப்படுகிறார் என்கின்றனர் கேரள விவரம் அறிந்தவர்கள். இவரை 'மினி சிஎம்' என்றே வர்ணிக்கின்றன கேரள ஊடகங்கள். சமீபத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் கேரள அரசின் கனவு திட்டமான லைஃப் மிஷன், ஃபைபர் நெட் போன்ற திட்டங்களில் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது என சந்தேகப்படுகிறது அமலாக்கத்துறை. இதில் நடந்திருக்கும் ஊழல்களை கண்டுபிடிக்க, ரவீந்திரனை விசாரணைக்கு அழைத்துள்ளது.

கடந்த சி.பி.எம் ஆட்சியின்போது சுற்றுலா இயக்குநராக இருந்த எம்.சிவசங்கருடன் நெருக்கமாக பணியாற்றிய அனுபவமும் ரவீந்திரனுக்கு இருக்கிறது. இதனால், தங்கக் கடத்தல் வழக்கிலும் அவருக்கு ஏதேனும் தகவல் தெரிந்திருக்கலாம் என்றும் சந்தேக்கிறது.

இதுமட்டுமல்ல, கடந்த 15 வருடங்களாக சி.பி.எம் ஆட்சிக் குறித்த அனைத்து தகவலும் ரவீந்திரன் அறிந்திருப்பார் எனக் கணக்குப் போடுகிறது அமலாக்கத்துறை. இவரிடம் விசாரணை நடத்தினால் பினாமி சொத்துக்கள் உள்ளிட்ட பல விவரங்கள் வெளிவரும் என்று எண்ணியே அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக சொல்லி மூன்றுமுறை சம்மன் அனுப்பிவிட்டது. ஆனால், தனது உடல்நிலையை காரணம் காட்டி விசாரணைக்கு ஆஜராக மறுத்து வருகிறார் ரவீந்திரன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com