நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திருக்குறளை மேற்கோள்காட்டி பேசினார். இதேபோல் பொருளதார ஆய்வறிக்கையிலும் திருக்குறள் இடம்பெற்றுள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடரையொட்டி நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய ராம்நாத் கோவிந்த், விவசாயத்திற்கு அரசு அளிக்கும் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறினார். விவசாயத்தின் மேன்மையை குறிப்பிடும் வகையில் ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்..’ என்ற திருக்குறளை சுட்டிக்காட்டி குடியரசு தலைவர் பேசினார்.
இதேபோல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கை உரையின் தொடக்கத்தில் இரு திருக்குறள்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் திருக்குறள் ஆய்வறிக்கையில் இடம் பெற்றுள்ளது. ‘பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று’ என்ற குறள் முதலாவதாக இடம்பெற்றுள்ளது.
பொருள் என்று சொல்லப்படும் விளக்கு நினைத்த இடத்திற்கு சென்று இடையூற்றை அகற்றும் என்பது இதன் பொருளாகும். ‘செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் எஃகதிற் கூரிய தில்’ என்ற குறளும் பொருளாதார ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ளது. பகைவரின் செருக்கை அழிக்கும் தகுதியான கருவி பொருளைத் தவிர வேறொன்றும் இல்லாததால் அதனைச் சேமிக்க வேண்டும் என்பது அதன் விளக்கமாகும்