இன்று தாக்கலாகும் பொருளாதார ஆய்வறிக்கை.. அப்படி என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் என்ன?
பொருளாதார ஆய்வறிக்கை, நாட்டின் தற்போதைய நிலையை விளக்கி, அடுத்தாண்டு பட்ஜெட்டுக்கான அடிப்படையை அமைக்கிறது. நெல், கோதுமை உற்பத்தி, தொழில் துறை வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் முன்னேற்றம் மற்றும் சவால்களை அலசுகிறது. இதன் மூலம் அரசின் வரவு செலவுத் திட்டம் தீர்மானிக்கப்படும்.
அடுத்தாண்டு என்ன செய்யப்போகிறோம் என்பதற்கான அறிக்கையாக பட்ஜெட் உள்ள நிலையில், இந்தாண்டு என்னசெய்தோம், நாட்டின் நிலைமை என்ன என்பதை படம் பிடித்துக்கூறுவதே பொருளாதார ஆய்வறிக்கை.
பொதுவாக பட்ஜெட்டுக்கு முந்தைய ஓரிரு நாட்களில் நாடாளுமன்றம் மூலம் நாட்டுமக்களுக்கு இது தெரிவிக்கப்படும். நெல், கோதுமை உள்ளிட்ட உணவுதானியங்களின் விளைச்சல் அதிகரித்ததா, தொழில் துறை உற்பத்தி அதிகரித்ததா? அதிகரிக்காவிட்டால் என்ன காரணம்? என்பன போன்ற தகவல்கள் இந்த அறிக்கையில் இடம்பெறும்.
அரசின் பல்வேறுதுறைகளும் சாதித்தது என்ன... கடந்தாண்டு பட்ஜெட் அறிவிப்புகளின்படி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டனவா... நிறைவேறாவிட்டால் அதற்கு காரணம் என்ன என்பது உள்ளிட்ட அலசல்களும் இந்த அறிக்கையில் இடம்பெறும்.
எந்தெந்த துறைகளில் எவ்வளவு வளர்ச்சி ஏற்படும் என்று ஆய்வறிக்கையில் கூறும் தகவலின்படிதான் அவற்றுக்கு அடுத்தாண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் அளவும் தீர்மானிக்கப்படும். இதேபோலவரி உட்பட பல்வேறு வழிகளில் அரசுஈட்டிய வருவாய் பற்றிய தகவல்களையும் இந்த அறிக்கை குறிப்பிடும்.
இதன் அடிப்படையில் தான் பட்ஜெட்டில் அடுத்த நிதியாண்டுக்கான அரசின் வரவு செலவும் முடிவு செய்யப்படும். தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தலைமையிலான குழு இந்தஅறிக்கையை தயாரித்துள்ளது.

