உக்ரைன் போர் எதிரொலி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு

உக்ரைன் போர் எதிரொலி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு
உக்ரைன் போர் எதிரொலி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 110 டாலராக உயர்ந்துள்ளது.

உக்ரைனில் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அதன் தாக்கம் சர்வதேச பொருள் வர்த்தக சந்தையிலும் எதிரொலித்து வருகிறது. குறிப்பாக உலகின் முக்கிய எரிசக்தி ஆதாரமாக உள்ள கச்சா எண்ணெய் விலை 8 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்து 110 டாலரை தொட்டுள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து பொருளாதாரம் கடுமையாக பாதிக்கும் நிலை உள்ளது.

இதற்கு தீர்வு காணும் விதமாக சர்வதேச எரிசக்தி முகமையின் உறுப்பு நாடுகள் தங்கள் வசம் உள்ள அவசரகால கச்சா எண்ணெய் கையிருப்பை வெளியே எடுக்க முடிவு செய்துள்ளன. இதன்படி இந்தியா உள்ளிட்ட நாடுகள் வரும் நாட்களில் 6 கோடி பீப்பாய் கச்சா எண்ணெயை அவசர கால சேமிப்பிலிருந்து எடுத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளன. இதனால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் தேவை குறைந்து அதன் விலை உயர்வு போக்கு ஓரளவு கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா உள்ளிட்ட 31 நாடுகளை உறுப்பினராக கொண்ட சர்வதேச எரிசக்தி முகமையில் 150 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் அவசர கால சேமிப்பாக உள்ளது. இதில் 6 கோடி பீப்பாய்கள் மட்டும் வெளியே எடுக்கப்பட உள்ளது. 3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை சேமிப்பிலிருந்து எடுக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிடம் அவசர கால தேவைக்காக 3 கோடியே 90 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை 3 இடங்களில் நிலவறைக்குள் சேமித்து வைத்துள்ளது. இது 8 முதல் 9 நாட்களுக்கான தேவையை பூர்த்தி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே உக்ரைன் போர் மேலும் தீவிரமடைந்தால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்வதற்காக வரும் ஏப்ரல் மாதத்தில் கூடுதல் கச்சா எண்ணெய்யை மத்திய கிழக்கு நாடுகளிடமிருந்து வாங்க பாரத் பெட்ரோலியம் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com