துர்கா தேவி இடத்தில் புலம்பெயர் ஏழைத் தாயின் சிலை: கலங்க வைத்த சிற்பி!

துர்கா தேவி இடத்தில் புலம்பெயர் ஏழைத் தாயின் சிலை: கலங்க வைத்த சிற்பி!
துர்கா தேவி இடத்தில் புலம்பெயர் ஏழைத் தாயின் சிலை: கலங்க வைத்த சிற்பி!

கொல்கத்தாவில் துர்கா பூஜையை முன்னிட்டு வடிவமைக்கப்படும் சிலைகளில் புலம்பெயர் தொழிலாளியான, குழந்தையுடன் கூடிய தாயின் சிலை வரவேற்பை பெற்றுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. கொரோனா பரவல் ஒரு புறம் அச்சுறுத்த மறுபுறம் பொதுமுடக்கம் பலரையும் வாட்டி வதைத்தது. பொருளாதார தட்டுப்பாட்டால் நாடே ஸ்தம்பித்தது.

கொரோனாவால் கொத்து கொத்தாக இழந்த உயிரைவிட பொதுமுடக்கத்தால் ஏழை மக்கள் உணவுக்காக மன்றாடியது அதிகம் என்றே சொல்லலாம். மாநிலம் விட்டு மாநிலம் சென்ற புலம்பெயர் ஏழைத் தொழிலாளிகள் ஒரு வேளை உணவுக்கே அல்லல் படும் கொடுமை அரங்கேறியது. அரசு தரப்பிலும் தன்னார்வலர்களாலும் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டாலும் ஏழைகளின் வறுமைக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

இதனால் பல்வேறு புலம்பெயர் தொழிலாளிகள் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுக்கத் தொடங்கினர். எத்தனையோ ஏழைத்தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை இடுப்பிலும் தோல்களிலும் சுமந்து கொண்டு நடந்தே விஜயம் மேற்கொண்டனர். எத்தனை கிலோமீட்டர் நடக்க போகிறோம், எத்தனை நாட்கள் ஆகும், எங்கு ஓய்வெடுப்போம், சாப்பிட ஏதாவது கிடைக்குமா, தண்ணீருக்கு என்ன செய்வோம், சிறு குழந்தைகளின் பிஞ்சு கால்கள் இந்த கஷ்டத்தை தாங்குமா என்ற அனைத்து பயத்தையும் உதறித்தள்ளி, ஊருக்கு சென்றால் ஒருவேளை கஞ்சியாவது குடிக்கலாம் என்ற நம்பிக்கையில், மன உறுதியுடன் மூட்டை முடிச்சியை கட்டிக்கொண்டு பிள்ளைகளுடன் புறப்பட்ட பெண்மணிகள் ஏராளம். இதில் பலர் செல்லும் வழியிலேயே உயிரை விட்டவர்களும் உண்டு. அதைப்பார்த்து மனம் கலங்காதவர்களே இருந்திருக்க முடியாது.

பல மாதங்களுக்கு பிறகு தற்போதுதான் பொருளாதாரமும் பொதுமுடக்கமும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில், அந்த பெண் தொழிலாளர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்த மாதம் நாடு முழுவதும் துர்கை பூஜை விழா கொண்டாடப்படுகிறது. இதில் துர்கா தேவி சிலை உள்ளிட்ட பல சிலைகள் வைத்து வழிபடுவது வழக்கம். அந்த வகையில் கொல்கத்தாவில் உள்ள ஒரு துர்கா பூஜா பந்தலின் அமைப்பாளர்கள் துர்கா தேவியின் சிலையை வைக்கும் இடத்தில், குழந்தையை சுமந்து செல்லும் ஒரு புலம் பெயர்ந்த தொழிலாளியான தாயின் சிலையை வைக்க முடிவு செய்துள்ளனர்.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக வேலை இழந்து, பிழைக்க வழியில்லாமல், நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் நடந்தே தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல கட்டாயப்படுத்தப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் பட்ட கஷ்டங்களை வெளிப்படுத்தும் விதமாக இந்த சிலைகளை வைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சிலை தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சேலை அணிந்திருக்கும் அப்பெண், சட்டை கூட அணியாத ஒரு குழந்தையை ஏந்தி நடந்து செல்கிறார். அருகில் இரண்டு சிறுவயது பெண் குழந்தைகளும் நடந்து செல்கின்றனர்.

இந்த சிலைகளை வடிவமைத்த ரிண்டு தாஸ் கூறுகையில், “பொதுமுடக்க காலத்தில், தொலைக்காட்சியில் பார்த்ததும், செய்தித்தாள்களில் படித்ததும் எனக்கு நினைவிருக்கிறது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்தே வீடு திரும்பினர். அவர்களில் சிலர் சாலையிலேயே இறந்தும் போனார்கள்.

அப்போது குழந்தைகளுடன் வீட்டிற்கு நடந்து செல்லும் பெண்களின் அழியாத துணிவு என்னை உலுக்கியது. என் மனதில், அவர்களை தெய்வங்களாக உருவகப்படுத்தினேன். அந்தப் பெண்தான் அன்னை துர்கை. தனது குழந்தைகளுடன் சேர்ந்து வெயிலையும், பசியையும் எதிர்கொள்ளும் துணிச்சலான பெண். அவர் தனது குழந்தைகளுக்கு உணவு, தண்ணீர் மற்றும் சிறிது நிவாரணம் தேடுகிறார்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com