உத்தராகண்டில் அதீத கனமழை: மழை வெள்ளத்தில் சிக்கி 42 பேர் உயிரிழப்பு

உத்தராகண்டில் அதீத கனமழை: மழை வெள்ளத்தில் சிக்கி 42 பேர் உயிரிழப்பு
உத்தராகண்டில் அதீத கனமழை: மழை வெள்ளத்தில் சிக்கி 42 பேர் உயிரிழப்பு
உத்தராகண்டில் பெய்த அதீத கனமழை காரணமாக அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்த அதீத கனமழையால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மலைப் பகுதிகளில் ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால், குஜராத் மாநிலத்தில் இருந்து கேதார்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட புனித தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்ட நூறு பேரின் நிலை என்னவானது என தெரியவில்லை.
சுற்றுலாவுக்கு பிரபலமான நைனிடால், கனமழையால் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அம்மாவட்டத்திற்கு செல்லும் மூன்று பிரதான சாலைகள் நிலச்சரிவால் மூடப்பட்டுள்ளன. மின் இணைப்பு, தொலைத்தொடர்பு சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால், பிற பகுதிகளில் இருந்து நைனிடால் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. கேதார்நாத் உள்ளிட்ட சார்தாம் யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள் பாதி வழியிலேயே தத்தளித்து வருகின்றனர். மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர்.
நைனிடால் மாவட்டம் முக்தேஷ்வரில், கல்லூரி சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி ஐந்து தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அவர்களது உடல்களை மீட்புப் படையினர் மீட்டு கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். கவுலா நதியில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் டெல்லி - காத்கோடாம் செல்லும் ரயில்வே தண்டவாளம் தண்ணீரில் அரித்துச் செல்லப்பட்டுள்ளது. இதனால், அந்த மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கவுலாவில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் யானை ஒன்றும் சிக்கி தப்பிக்க போராடியது. உடனடியாக விரைந்து சென்ற மீட்புப் படையினர், அதை பத்திரமாக மீட்டு கரை சேர்த்தனர்.
இதற்கிடையே பலத்த மழை மற்றும் நிலச்சரிவில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக ராணுவ ஹெலிகாப்டர் உதவி கோரப்பட்டுள்ளது. சார்தாம் யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள் தற்போது தங்கியிருக்கும் இடத்தை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். சமோலி மற்றும் ருத்ரபியாக் மாவட்ட ஆட்சியர்கள் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டர் மூலம் வெள்ள சேதங்களை பார்வையிட்ட முதல்வர் தாமி, வேளாண் நிலங்கள் அதிக அளவில் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதாக கவலை தெரிவித்தார். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை வழங்க அரசு உறுதி பூண்டியிருப்பதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையே கடந்த 24 மணி நேரத்தில் 200 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகியிருப்பதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக அல்மோராவில் 216 புள்ளி 6 மில்லி மீட்டரும், துவாராஹாட்டில் 184 மில்லி மீட்டரும், நைனிடாலில் 90 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com