’’ஏழை வீட்டில் பிறந்த மகள் நான்...’’ - இந்தியாவின் ’முதல் குடிமகள்’ திரெளபதி முர்மு உரை

’’ஏழை வீட்டில் பிறந்த மகள் நான்...’’ - இந்தியாவின் ’முதல் குடிமகள்’ திரெளபதி முர்மு உரை
’’ஏழை வீட்டில் பிறந்த மகள் நான்...’’  - இந்தியாவின் ’முதல் குடிமகள்’ திரெளபதி முர்மு உரை

இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு பதவியேற்றார்.

நாட்டின் முதல் குடிமகளான திரெளபதி முர்முவுக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து பாரம்பரிய முறைப்படி ஊர்வலமாக வருகை தந்து பதவியேற்றார். 21 குண்டுகள் முழங்க பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், நாட்டு மக்களிடையே அவர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ’’குடியரசுத் தலைவராக பதவியேற்றது பெருமையளிக்கிறது. என்னை தேர்ந்தெடுத்த எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களுக்கு நன்றி. நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி. நாட்டு மக்களின் வளமான எதிர்காலத்திற்காக பணியாற்றுவேன். அடுத்த 25 ஆண்டுக்கான தொலைநோக்கு திட்டம் தயாராகும் நேரத்தில் சேவையாற்ற வாய்ப்பு கிடைத்தது பாக்கியம். சாதாரண கவுன்சிலராக தொடங்கி குடியரசுத் தலைவராக உயர்ந்தது ஜனநாயகத்தின் தாயகமான இந்தியாவின் மகத்துவம்.

ஏழை வீட்டில் பிறந்த மகள் நான், குடியரசுத் தலைவராக முடியும் என்பதுதான் ஜனநாயகத்தின் சக்தி. பெண்கள், இளைஞர்களின் நலனில் தனி கவனம் செலுத்துவேன். என்னுடைய உயர்வு கோடிக்கணக்கான பெண்களின் கனவுகளுக்கான திறவுகோலாக இருக்கும். சுதந்திர போராட்ட வீரர்கள் நாட்டின் சுய மரியாதையை முதன்மையாக வைத்திருக்க கற்றுக் கொடுத்திருக்கின்றனர். சுதந்திரப் போராட்டத்தில் பழங்குடியின மக்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர்.

கொரோனா காலத்தில் உலகத்திற்கே இந்தியா பெரும் நம்பிக்கையாக திகழ்ந்தது. பல ஆண்டுகளாக முன்னேற்றம் காணாத பிற்படுத்தப்பட்டோர், ஏழைகள் என்னை அவர்களது பிரதிபலிப்பாக பார்க்கலாம். அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து பாரதத்தைக் கட்டியெழுப்ப முனைப்புடன் செயல்படுவோம்’’ என்று பேசினார்.

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், மாநில முதல்வர்கள், மக்களவை எம்.பி.க்கள், முப்படை அதிகாரிகள் ஆகியோர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com