ரஜோரியில் அதிரடி தடை... எல்லைப் பகுதியில் ட்ரோன் விமான வேட்டை நடப்பது எப்படி?
ஜம்மு - காஷ்மீர் மற்றும் பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் அடிக்கடி ட்ரோன் விமானங்கள் பறப்பதால் பதற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில், ஜம்முவில் உள்ள ரஜோரி மாவட்டத்தில் ட்ரோன் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளில் முக்கிய பாதுகாப்புப் படை முகாம்கள் அருகே உள்ள குடியிருப்புகளில் யாரேனும் ட்ரோன் விமானங்களை பயன்படுத்துகிறார்களா என உளவுத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவிலேயே ரஜோரி மாவட்டத்தைப் போலவே பிற எல்லை மாவட்டங்களிலும் ட்ரோன் விமானங்களுக்கு தடை விதிக்கப்படலாம் என அதிகாரிகள் கருதுகிறார்கள்.
இரவு நேரங்களில் இந்தப் பகுதிகளில் அடிக்கடி ஆளில்லாத சிறிய விமானங்கள் பறப்பது பெரிய அச்சுறுத்தலாக கருதப்படுகிறது. ஜம்மு விமான தளத்தில் இத்தகைய ட்ரோன் விமானம் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, எல்லைப் பகுதிகளிலே இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பல வருடங்களாகவே ட்ரோன் விமானங்கள் விளையாட்டுப் பொருட்களாக கருதப்பட்டு வந்த நிலையில், இறக்குமதி மற்றும் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் இல்லாமல் இருந்தது. பின்னர் கேமரா பொருத்தப்பட்ட ட்ரோன் விமானங்கள் மூலம் உளவு நடவடிக்கைகள் நடைபெறலாம் என்பதால், கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. ட்ரோன் விமானங்களை உரிமையாளர்கள் பதிவு செய்ய வேண்டும் எனவும் விமான நிலையங்கள் போன்ற இடங்களுக்கு அருகிலேயே பயன்படுத்தக் கூடாது எனவும் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
ஆனால், ஜம்மு விமான தளத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு பிறகு, அச்சுறுத்தலின் தீவிரம் மிகவும் அதிகம் என்பது நிதர்சனமாகியுள்ளது. ஆகவேதான் ஏற்கனவே குடியரசு தினம் போன்ற முக்கிய நிகழ்வுகள் நடைபெறும்போது ட்ரோன் விமானங்களுக்கு தடை விதிக்கப்படுவது போலவே தற்போது ரஜோரி மாவட்டத்தில் முழுமையான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் எல்லையிலிருந்து இத்தகைய ஆளில்லாத சிறிய ரக ட்ரோன் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறந்து வருவதை இந்தத் தடையால் தடுக்க முடியாது. ஆனால், தீவிரவாத அமைப்புகள் ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளில் இருந்து இத்தகைய ட்ரோன் விமானங்களை இயக்குவதை இந்தத் தடை மூலம் கட்டுப்படுத்தலாம் என அதிகாரிகள் கருதுகிறார்கள்.
இதற்கிடையே, நேபாள எல்லையில் கேமரா பொருத்தப்பட்ட ட்ரோன் விமானங்களை இந்தியாவுக்குள் கடத்த நடத்தப்பட்ட முயற்சி மூலம் பல்வேறு விதமான கேள்விகளுக்கு விடை கிடைத்துள்ளன. முதலாவதாக சீனாவிலிருந்து இத்தகைய ட்ரோன் விமானங்கள் நேபாளம் மற்றும் பங்களாதேஷ் எல்லைகள் வழியாக இந்தியாவுக்கு கடத்தப்படுகின்றன. தீவிரவாத செயல்கள் கடத்தல் மற்றும் உளவு பார்ப்பது போன்ற பல்வேறு தேச விரோத செயல்களுக்கு இந்த ட்ரோன் விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
சீனாவில் தயாரிக்கப்படும் ட்ரோன் விமானங்கள், பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பாகிஸ்தான் நாட்டில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளுக்கு வழங்கப்படுவது போன்ற சந்தேகங்களும் சரியே என தற்போது நேபாள எல்லையில் கைப்பற்றப்பட்ட ட்ரோன் விமானங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. நேபாள எல்லையில் கைப்பற்றப்பட்ட ட்ரோன் விமானங்கள் சீன நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்பதை அதிகாரிகள் சந்தேகமின்றி புரிந்துகொண்டுள்ளனர்.
இந்த சிறிய ரக ஆளில்லா விமானங்கள் பெரும்பாலும் பிளாஸ்டிக் பாகங்கள் கொண்டு தயாரிக்கப்படுவதால் வேறு பல வழிகளிலும் இவை இந்தியாவுக்குள் கடத்தப்படுகின்றன. பலமுறை பயணிகள் விமானங்களை இயக்கும் விமானிகள் இத்தகைய சிறிய ட்ரோன் விமானங்களை கண்டதாக தங்களுடைய அறிக்கைகளில் குறிப்பிட்டுள்ளனர். இந்த ஆளில்லா சிறிய விமானங்கள் பயணிகள் விமானங்களுக்கு அச்சுறுத்தல் என்பதையும் அவர்கள் வழக்கமாக ஒவ்வொரு விமான சேவை இயக்கத்துக்கும் பிறகு தாக்கல் செய்யும் அறிக்கைகளில் வலியுறுத்தி உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தார்கள்.
ட்ரோன் விமானங்களை கட்டுப்படுத்துவது மற்றும் நாச வேலைகளுக்கு அவற்றை பயன்படுத்தாமல் தடுப்பது ஆகியவை சற்று சிக்கலான விவகாரங்கள் என்பது அதிகாரிகள் கருத்து. மேலும் தற்போதைய அச்சுறுத்தல் எல்லைப் பகுதிகளிலே நிலவுவதால் பிரச்னை மேலும் சிக்கலாகிறது. ஒருபுறம் விமான போக்குவரத்து துறை சிறிய ரக ஆளில்லா விமானங்களை பயன்படுத்துவதற்கான பல்வேறு விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. எல்லைப் புறங்களில் அச்சுறுத்தல் பாதுகாப்பு படைகளை அதிகம் பாதிக்கும் என்பதால், முப்படைகளை சேர்ந்தவர்கள் தற்போதைய ட்ரோன் தடுப்பு நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள். தேசவிரோத செயல்களில் இத்தகைய ஆளில்லா ட்ரோன் விமானங்கள் ஈடுபடுத்தப்படுவதால், தேசிய பாதுகாப்பு முகமை மற்றும் உளவுத்துறை சேர்ந்தவர்களும் தற்போதைய ட்ரோன் வேட்டையில் பங்கேற்கின்றனர்.
அச்சுறுத்தல் அதிகம் இருப்பதால் அரசு அமைப்புகளை சேர்ந்தவர்கள்கூட ட்ரோன் விமானங்களை அனுமதிபெற்று இயக்க வேண்டும் என ரஜோரி மாவட்ட ஆட்சியர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். ஆகவே, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தடுப்பதில் தற்போதைய ஆளில்லா விமானங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எத்தகைய முக்கியத்துவம் பெறுகின்றன என்பது தெளிவாகிறது. ஜம்மு - காஷ்மீர் மற்றும் பஞ்சாப் பகுதிகளில் உள்ள பாதுகாப்பு படை முகாம்களில் டிஆர்டிஓ தயாரிப்பான ட்ரொன் விமானங்களை கண்டுபிடித்து செயல் இழக்க செய்யும் கருவிகளை பயன்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அத்துடன் பல்வேறு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் வரும் நாட்களில் எல்லைப் பகுதிகளில் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கணபதி சுப்பிரமணியம்