அகதிகளின் தலைநகரமாக இந்தியா மாறுவதா?: மத்திய அரசு கேள்வி
அகதிகளின் தலைநகரமாக இந்தியா மாறுவதை விரும்பவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மியான்மரில் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதரண சூழல் காரணமாக ரோஹிங்கிய முஸ்லிம்கள் அங்கிருந்து அண்டைகளுக்கு அகதிகளாக வெளியேறி வருகின்றனர். இதில், தங்களது பூர்வீகமாக கருதப்படும் வங்கதேசம் நாட்டில் அவர்கள் அதிகம் தஞ்சம் அடைந்தனர். மேலும், இந்தியாவிலும் ரோஹிங்கிய முஸ்லீம்கள் அகதிகளாக குடியேறினர். சுமார் 40 ஆயிரம் ரோஹிங்கிய முஸ்லீம்கள் இந்தியாவில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் அகதிகளாக குடியேறியுள்ள ரோஹிங்கியாக்கள் மீண்டும் வங்கதேசத்துக்கோ, மியான்மருக்கோ திருப்பி அனுப்ப வேண்டும் என்று உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார். இதற்கு ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் சயீத் ரா அத் அல் ஹூசைன் கடும் கண்டனம் தெரிவித்தார். ஆனால், ரோஹிங்கிய முஸ்லீம்களை திருப்பி அனுப்புவது தொடர்பான அதிகாரபூர்வ முடிவை இன்னும் இந்திய அரசு எடுக்கவில்லை.
ரோஹிங்கியா முஸ்லீம்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மனுதாரர்கள் சார்பில் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வாதாடி வருகிறார். ரோஹிங்கியா விவகாரம் தொடர்பாக இன்று விசாரணை நடைபெற்றது.
விசாரணையின் போது, தூதரக ரீதியிலான விவகாரமாக இதனை எதிர்கொள்வது சரியாக இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்தது. மேலும், அகதிகளின் தலைநகரமாக இந்தியா மாறுவதை விரும்பவில்லை என்று கூறியது. இதனையடுத்து மார்ச் 7ம் தேதிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.