'இந்தியாவில் மதச் சுதந்திரம் குறித்து ட்ரம்ப் பேச வாய்ப்பு' - வெள்ளை மாளிகை
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் இந்திய பயணத்தின் போது அவரது மகள் இவான்கா ட்ரம்ப் உள்ளிட்ட 12 பிரதிநிதிகள் வருகின்றனர். இதனிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியிடம் மதச் சுதந்தரம் தொடர்பான பிரச்னைகள் குறித்து பேச வாய்ப்புள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
24ஆம் தேதி இந்தியா வரும் ட்ரம்ப், அகமதாபாத், ஆக்ரா மற்றும் டெல்லிக்கு செல்ல இருக்கிறார். இந்த பயணத்தின் போது ட்ரம்ப்புடன் அவரது மனைவி மெலனியா, மகள் இவான்கா மற்றும் அவரது கணவரும் ட்ரம்பின் நெருங்கிய ஆலோசகருமான ஜெரெட் குஷ்னர் ஆகியோர் வருகை தர இருக்கின்றனர்.
இவர்களுடன் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைட்ஹைசர், பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன், வர்த்தக செயலாளர் வில்பர் ரோஸ் உள்ளிட் 12 பிரதிநிதிகளும் இந்தியா வருவதாக அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக தகவல்களை வெளியிட்டிருக்கிறது. இவர்கள் அனைவரும் பிரதமர் மோடி-ட்ரம்ப் ஆகியோர் பங்கேற்க அகமதாபாத்தில் உள்ள சர்தார்வல்லபாய் படேல் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நமஸ்தே ட்ரம்ப் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
இதனிடையே, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிரதமர் மோடியிடம் மத சுதந்தரம் தொடர்பான பிரச்னைகள் குறித்து பேச வாய்ப்புள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. குடியரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அமெரிக்கா கவலை கொண்டிருப்பதாகவும் வெள்ளை மாளிகை உயர் அதிகாரி தெரிவித்தார்.
இந்தியாவில் மத சிறுபான்மையினருக்கு சுதந்தரம் தொடர்ந்து நீடிக்கிறதா என்பதை உலகமே உற்றுநோக்கும் நிலையில் இது குறித்து மோடியுடன் டிரம்ப் பேச வாய்ப்புள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார். எனினும் இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியத்திலும் அமைப்புகளின் மீதும் தாங்கள் பெருமதிப்பு வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்