பாகிஸ்தானுடன் கிரிக்கெட்டா? ராணுவ வீரர் குடும்பம் எதிர்ப்பு
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடக் கூடாது என பாகிஸ்தான் படையினரால் கொல்லப்பட்ட ராணுவ வீரரின் குடும்பம் வலியுறுத்தியுள்ளது.
பாகிஸ்தான் பயங்கரவாதிகள், கட்டுப்பாடுகளை மீறி இந்திய எல்லைகள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய பாதுகாப்புப் படையை சேர்ந்த பிரேம் சாகர் மற்றும் நயிப் சுபேதர் பரம்ஜித்சிங் என்ற இரண்டு வீரர்களை பாகிஸ்தான் படையினர் உடலை சிதைத்து கொன்று, எல்லை பகுதியில் வீசி சென்றனர்.
இந்நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா இன்று மோதுகிறது. இந்தப் போட்டியை தாங்கள் எதிர்ப்பதாகவும், பாகிஸ்தானுடன் இந்திய அணி விளைாயட கூடாது என்றும், பிரேம் சாகரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தங்களது வலியை அரசு கண்டிப்பாகப் புரிந்து கொண்டு, பாகிஸ்தானுடன் எந்த உறவும் வைத்துக்கொள்ள கூடாது என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இந்தியா- பாகிஸ்தான் அணிகள் விளையாட பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிசிசிஐ அனுமதிக்காது என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.