'சேர்ந்து வாழ எங்களுக்கு ஆசை.. கொன்று விடாதீர்கள்..’கேரள இளம் தம்பதி உருக்கம்..!
எங்களை கொன்று விடாதீர்கள். நாங்கள் இருவரும் சந்தோஷமாக சேர்ந்து வாழ விரும்புகிறோம் என கேரள இளம் தம்பதி ஃபேஸ்புக் வீடியோவில் உருக்கமாக தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம் அட்டிங்கல் பகுதியை சேர்ந்தவர் ஹர்சன். வயது 20. வாழப்பட்டனம் பகுதியை சேர்ந்தவர் ஷகானா. வயது 19. இவர்கள் இருவரும் கடந்த 5 நாட்களுக்கு முன் மாயமாகினர். எனவே இவர்களை கண்டுபிடித்து தரக்கோரி இருவரின் குடும்பத்தினரும் தனித்தனியாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
இந்நிலையில் இருவரும் சேர்ந்தபடி ஃபேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில், “ தயவு செய்து எங்களை கொன்றுவிடாதீர்கள். நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ விரும்புகிறோம். இன்னொரு கெவின்போல என் வாழ்க்கை முடிய நான் விரும்பவில்லை.(உயர் சாதி பெண்ணை திருமணம் செய்ததால் கெவின் கொல்லப்பட்டிருந்தார்). எந்த நேரத்திலும் என்னை கொன்றுவிடுவேன் என தொடர்ச்சியாக மிரட்டல் வருகிறது. நான் மட்டுமில்ல என் குடும்பத்தினரையும் கொன்றுவிடுவதாக மிரட்டல் விடுகின்றனர். ஷகானாவின் குடும்பத்தினர் மற்றும் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்தவர்கள்தான் இந்த மிரட்டலை விடுகின்றனர். எங்களை வாழ விடுங்கள்” என ஹரிசன் கூறுகிறார்.
ஷகானா கூறும்போது, “தயவு செய்து எங்களை தனியாக வாழவிடுங்கள் அப்பா மற்றும் அம்மா. எனக்கு காதல் வந்தபோது மதம், மற்றும் ஜாதி பற்றி நான் பெரிதாக நினைக்கவில்லை. திருமணம் செய்து கொண்டபோதும் அதனை பெரிதாக எடுக்கவில்லை. நான் இப்போதும் முஸ்லிம்மாகத் தான் இருக்கிறேன். அவர் என்னை மதம் மாறும்படி வற்புறுத்தவில்லை. மதம் மாறிவிடுவேன் என எந்த வாக்குறுதியையும் நான் அளிக்கவும் இல்லை. என் சுய விருப்பத்தின்பேரில் தான் நான் இவரோடு வாழ்கிறேன். என்னை கொன்று விடாதீர்கள். நான் அவருடன் வாழ விரும்புகிறேன்” என கூறியுள்ளார்.
ஹரிசன் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். அதேசமயம் ஷகானா முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். மதம் மாறி திருமணம் செய்து கொண்டதால் கொன்றுவிடுவதாக மிரட்டல் வருவதாக இளம்தம்பதியினர் உருக்கமாக தெரிவித்துள்ளனர்.
இதனிடையே மாயமான இருவரும் அட்டிங்கல் காவல்நிலையத்தில் ஆஜராகினர். போலீசார் அவர்களை நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். அப்போது, தான் ஹரிசனுடன் சேர்ந்தது வாழ ஆசைப்படுவதாகவும், அவரை திருமணம் செய்து கொண்டதாகவும் ஷகானா தெரிவித்தார். இதனையடுத்து இருவரும் மேஜர் என்பதால் அவர்களை போலீசார் விடுவித்தனர்.
Courtesy: TheNewsMinute