2வது முறை ரேஸிங்கில் ஈடுபட்டால் 2 லட்சம் அபராதம் - பெங்களூர் போலீஸ் அதிரடி
இராண்டாவது முறை இருசக்கர வாகனத்தில் சாகசம் (ரேஸ்) செய்வோருக்கு 2 லட்சம் வரை அபராதம் விதிக்க பெங்களூர் காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெங்களூரில் இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்வோரை கட்டுக்குள் கொண்டு வர பெங்களூர் காவல்துறை கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி இராண்டாவது முறையாக ஒரு நபர் இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்டால் அவருக்கு 2 லட்சம் வரை அபாரதம் விதிக்க பெங்களூர் காவல்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் முதன் முறையாக ஒரு நபர் சாகசத்தில் ஈடுபட்டு சிக்குவோராயின் அவர் மீது 107 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பெங்களூரில் இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபடுவோருக்கு 2000 ரூபாய் அபராதமும், சம்பந்தப்பட்ட நபர்களின் ஓட்டுநர் உரிமத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டதோடு, அவர்களின் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. அதே போல இருசக்கர வாகனங்களின் சைலன்சர்களை இராண்டாவது முறையாக மாற்றியமைத்து கொடுக்கும் பழுது நீக்கும் பணியாளர்களுக்கு 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள தகவலின் படி பெங்களூரில் முன்னெப்போதும் இல்லாத வகையில் விதிகளை மீறி இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபடும் 28 நபர்களை 2 லட்சம் காசோலைக்கான பத்திரத்தில் காவல்துறை கையெழுத்திட வைத்துள்ளனர். மேலும் இருசக்கர வாகன பழுது நீக்கும் உரிமையாளர்கள் 4 பேர் மீது சட்டப்பிரிவு 110 இன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து போக்குவரத்து இணை ஆணையர் ரவிகாந்தே கவுடா கூறும் போது “ இதுவரை வாகன சாகத்தில் ஈடுபட்ட 48 பேர் மீது சட்டப்பிரிவு 279 இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 28 நபர்கள் மீது மக்கள் நெரிசல் அதிகமான இடங்களில் சாகசத்தில் ஈடுபட்டு இடையூறு ஏற்படுத்தியதற்காக சட்டப்பிரிவு 107 இன் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.” என்றார்.
courtesy:https://www.thenewsminute.com/article/doing-bike-stunts-bengaluru-cops-slap-rs-2-lakh-fine-repeat-offenders-136232?amp=&utm_campaign=fullarticle&utm_medium=referral&utm_source=inshorts