மார்ச்சுவரியில் பெண்ணின் உடலை குதறிய நாய்: அரசு மருத்துவமனையில் அவலம்
லக்னோவில், அரசு மருத்துவமனையில் புகுந்த நாய் ஒன்று பெண்ணின் உடலை கடித்துத் தின்ற சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருக்கிறது டாக்டர் ராம் மனோகர் லோகியா அரசு மருத்துவமனை. இங்கு விஷம் குடித்த புஷ்பா திவாரி (40) என்ற பெண் சிகிச்சைக்கு வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் இறந்தார். இவரது உடல் மருத்துவமனை மார்ச்சுவரியில் வைக்கப்பட்டது. மார்ச்சுவரியில் புகுந்த நாய் ஒன்று பிரீசரில் வைக்கப்பட்டிந்த அந்த உடலை கடித்து வெளியே இழுத்துக் கொண்டு வந்தது. பின்னர் குதறி சாப்பிடத் தொடங்கியது. இதைக் கண்ட மருத்துவமனை ஊழியர்கள், நாயை அடித்து விரட்டினர். இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற செக்யூரிட்டி மற்றும் சூப்பர்வைசர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதுகுறித்து புஷ்பா திவாரியின் உறவினர்கள் கூறும்போது, ‘ முகம் மற்றும் கழுத்துப் பகுதியை கடித்து நாய் தின்று விட்டது. அவர் அணிந்திருந்த தோடு, மூக்குத்தி ஆகியவை மாயமாகிவிட்டது’ என்றனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விசாரித்து வருகின்றனர்.