'குட்டா பாபு'வின் மகன் 'டாக் பாபு'; பீகாரில் SIR நடவடிக்கையில் நாய்க்கு இருப்பிட சான்றிதழ் !
பீகாரில், இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, அம்மாநிலத்தில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இந்தப் பணி கடந்த ஜூலை 25ஆம் தேதியுடன் நிறைவுற்றது. அதன்படி,பீகாரில் உள்ள 7.9 கோடி வாக்காளர்களில் இறப்பு, இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இரு இடங்களில் பதிவு என மொத்தம் 65.2 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 1-ந்தேதி வெளியிடப்படும் என்றும், அதில் தகுதியுள்ள அனைவரும் சேர்க்கப்படுவார்கள் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
வாக்காளர் சீர்திருத்த நடவடிக்கைக்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும்நிலையில், டாக் பாபு என்ற பெயரில் கோல்டன் ரெட்ரீவர் வாகை நாய்க்கு இருப்பிட சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கும் வினோத சம்பவம் நடந்திருக்கிறது.
அரசாங்கத்தின் ஓட்டைகளை மெய்பித்து காட்டும் இந்த செய்தி, குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
டெல்லியை சேர்ந்த ஒரு பெண்ணின் ஆவணங்களை கொடுத்து யாரோ இந்த சான்றிதழை பெற்றிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
மேலும், இதுகுறித்து மாஜிஸ்திரேட் தியாகராஜன் கூறுகையில், “ஜூலை 24ம் தேதி மாலை 3.56 மணிக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறது. இருப்பினும், இரண்டே நிமிடங்களில், அதாவது 3.58 மணிக்கு இது கண்டறியப்பட்டு ரத்து செய்யப்பட்டது. இதில் தொடர்புடையவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது மிகவும் தீவிரமான விஷயம். யாரோ விஷமி இப்படி ஒரு விஷயத்தைச் செய்துள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் , சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளநிலையில், சைபர் க்ரைம் போலீஸ் இது குறித்து விசாரித்து வருகிறது. இதை விண்ணப்பித்தவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அதிகாரிகளின் அலட்சியத்தை சுட்டிக்காட்டுகிறது என்று மக்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
பீகார் மாநிலம் பாட்னாவிற்கு அருகிலுள்ள மசௌரி என்ற நகரத்தில் உள்ள RTPS (பொது சேவைகளுக்கான உரிமை) போர்ட்டலில் 'நாய் பாபு' என்று அடையாளம் காணப்பட்ட நாய் ஒன்றிக்கு இருப்பிட சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த நாயின் போட்டோவுடன் கூடிய சான்றிதழ் வெளியாகி சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
இதுகுறித்த இருப்பிட சான்றிதழில், தந்தையின் பெயர் ’குட்டா பாபு’ என்றும் தாயின் பெயர் ’குட்டியா தேவி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல கோல்டன் ரெட்ரீவர் நாயின் புகைப்படமும் இடம்பெற்றிருக்கிறது. முகவரில், கவுலிச்சக், வார்டு எண்: 15 மசவுரி தபால் நிலைய பகுதியில் வசிப்பதாகவும் இருக்கிறது. வருவாய் அலுவலர் முராரி சவுகான் என்பவர் டிஜிட்டல் முறையில் கையெழுத்திட்டு அந்த சான்றிதழ் வழங்கியுள்ளார். (சான்றிதழ் எண். BRCCO/2025/15933581). இந்தச் சம்பவம் பேசுபொருள் ஆன நிலையில், அதிகாரிகள் இது குறித்து விசாரித்துள்ளனர்.
மேலும், இதுகுறித்து தெரிவித்துள்ள சுவராஜ் இந்தியா உறுப்பினர் யோகேந்திர யாதவ், தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகள் எல்லாம் போலி என்று அழைக்கப்பட்ட பீகாரில்தான் வாக்காளர் சரிபார்ப்பின்போது நாய் ஒன்றிக்கு இருப்பிட சான்றிதழ் வழங்கியுள்ளனர்.” என்று பதிவிட்டுள்ளார்.