ஹெராயின் கடத்தல்: சந்தேக வலையில் ஆப்கானியர்கள்... விசாரணை நடப்பது எப்படி?

ஹெராயின் கடத்தல்: சந்தேக வலையில் ஆப்கானியர்கள்... விசாரணை நடப்பது எப்படி?

ஹெராயின் கடத்தல்: சந்தேக வலையில் ஆப்கானியர்கள்... விசாரணை நடப்பது எப்படி?
Published on

குஜராத்துக்கு கடத்தப்பட்ட ஹெராயின் எங்கிருந்து வந்தது மற்றும் ஈரான் நாட்டின் மூலம் இந்தியாவில் யாருக்கு அனுப்பப்பட்டது என்பது குறித்து கைது செய்யப்பட்ட ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் மூலம் கண்டறியவும் விசாரணை நடந்து வருகிறது.

குஜராத்தில் 3,000 கிலோ ஹெராயின் சமீபத்தில் பிடிபட்டிருந்தது. அதை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்த நிறுவனத்தின் முகவரி ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள கந்தஹார் என குறிப்பிடப்பட்ட காரணத்தால், அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்தக் கடத்தலில் சம்பந்தப்பட்டிருப்பார்கள் என காவல்துறையினரால் சந்தேகிக்கப்பட்டது. அந்த சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் ஆப்கன் நாட்டைச் சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர். டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில், புலம்பெயர்ந்த ஆப்கன் நாட்டினர் வசித்து வருகிறார்கள் என்பதால் அனைவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. 

இவ்விவகாரத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மேலும் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தற்போது தகவல் அளித்துள்ளனர். ஏற்கெனவே 2 ஆப்கன் நாட்டவர் உட்பட மொத்த 5 பேரை கைது செய்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.

கந்தஹார் நகரத்தில் செயல்படும் ‘ஹசன் ஹுசைன் லிமிடெட்’ என்ற நிறுவனத்தின் பெயரில்தான் இந்த ஏற்றுமதி நிகழ்ந்த்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் பின்னணியில் இருந்து செயல்பட்டது யார் என கண்டறிய இந்திய காவல்துறை சார்பில் பல முயற்சிகள் நடந்து வருகின்றன. கந்தஹார் நகரம் தலிபான்களின் கோட்டை என்றும், தலிபான் அமைப்பின் பிறப்பிடம் என்றும் கருதப்படுவது இங்கே குறிப்பிடத்தக்கது.

இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 7 நபர்களை விசாரித்து, அதன்மூலம் இந்தியாவில் எங்கெல்லாம் போதைப்பொருள் கடத்தல் வலை பின்னப்பட்டுள்ளது என்பதை கண்டறிய, பல்வேறு அரசு அமைப்புகள் ஒருங்கிணைந்து தற்போது விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் மூலமாகவும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் போதைப்பொருள் தடுப்பு அமைப்பு, சுங்கத்துறை, உளவுத்துறை அமைப்புகள் மற்றும் அமலாக்கத் துறை மூலம் போதைப் பொருட்களை கடத்துவது யார் என்பதற்கான முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது மூலம் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி அனுப்ப ஏற்பாடு செய்யப்படுகிறது போன்ற பல்வேறு தகவல்கள் வெளிவந்துக்கொண்டிருப்பதால், அதுவும் தற்போது விசாரணையில் உள்ளன. மும்பை, பெங்களூரு, சென்னை, டெல்லி மற்றும் கோவா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், கடத்தல் கும்பலின் பின்னணியில் உள்ளது யார் என்பதை கண்டறிய முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

கைது செய்யப்பட்ட 7 பேரில், சென்னையில் வசித்து வந்தவர்கள் இருவர் என்பதால், அவர்களுடைய நிறுவனம் இதற்கு முன்பு என்ன இறக்குமதி செய்துள்ளது மற்றும் யாருடன் தொடர்பு கொண்டுள்ளது போன்ற விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. ஆப்கன் நாடு தற்போது தலிபான் கட்டுப்பாட்டில் இருப்பதால் அங்கிருந்து தகவல்களை சேகரிப்பதில் சிக்கல் உள்ளதாகவும், அதே சமயத்தில் ஈரான் நாட்டில் தற்போது விசாரணைகள் நடந்து வருவதாகவும் இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஈரான் நாட்டில் நடந்துவரும் விசாரணை மூலம் போதைப்பொருள் கடத்தப்பட்ட விவகாரத்தில் ஆப்கன் நாட்டை சேர்ந்த யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதை கண்டறியும் முயற்சி நடந்து வருகிறது. அதேபோல இறக்குமதி நிறுவனம் செய்துள்ள பணப் பரிவர்த்தனைகள் மூலம் இந்த போதைப் பொருள் கடத்தல் தொடர்பு உலகின் வேறு நாடுகளிலும் உள்ளதா என்பதை கண்டறிய முயற்சி நடைபெற்று வருகிறது.

- கணபதி சுப்ரமணியம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com