காங்கிரஸ் டு பாஜக அமைச்சர்... புதுச்சேரி அரசியலில் நினைத்ததை சாதித்தாரா நமச்சிவாயம்?

காங்கிரஸ் டு பாஜக அமைச்சர்... புதுச்சேரி அரசியலில் நினைத்ததை சாதித்தாரா நமச்சிவாயம்?
காங்கிரஸ் டு பாஜக அமைச்சர்... புதுச்சேரி அரசியலில் நினைத்ததை சாதித்தாரா நமச்சிவாயம்?

யூனியன் பிரதேசமான புதுச்சேரி அரசியலின் நவீன சாணக்கியன் என்றால் அது அமைச்சர் நமச்சிவாயம் தான். கடந்த ஜனவரியில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதாவில் இணைந்தவர். தற்போது புதுச்சேரி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். கடந்த காங்கிரஸ் ஆட்சியிலும் இவர் அமைச்சராக பணியாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

யார் இவர்?

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் 2001 தேர்தலிலும், காங்கிரஸ் கட்சி சார்பில் 2006, 2011 மற்றும் 2016 சட்டப்பேரவை தேர்தல்களில் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றியவர். 

2016 தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் என்றெல்லாம் அவரது பெயர் சொல்லப்பட்டதாக சொல்கின்றனர் நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள். அந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமி முதல்வராக அறிவிக்கப்பட்டார். அதனால் அப்போதிலிருந்தே நமச்சிவாயம் அதிருப்தியில் இருந்ததாக சொல்லப்பட்டது. இருப்பினும், காங்கிரஸ் மீது கொண்ட விசுவாசத்தினால் தனது பதவியை அவர் தொடர்ந்துள்ளார். ஆரம்பத்தில் தனக்கு முதல்வராக வேண்டுமென்ற விருப்பம் இருந்ததாகவும், கட்சி தலைமையின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு தனக்கு கொடுத்த பதவியில் இருந்ததாகவும் அவர் பேட்டியில் ஒருமுறை சொல்லி இருந்தார். 

இறுதியில் அதிருப்தி காரணமாக கடந்த ஜனவரி வாக்கில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த நமச்சிவாயம், பாஜகவில் இணைந்தார். 2021 தேர்தலில் பாஜக சார்பில் வென்று அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். 

ரங்கசாமியின் வீழ்ச்சிக்கும், வெற்றிக்கும் வித்திட்டவர்! புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மற்றும் அவரது என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை 2016 தேர்தலில் வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தவர் நமச்சிவாயம். இந்நிலையில் அதே என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 2021 தேர்தலில் ஆட்சியை பிடிக்க அவர் கூட்டணி உறுப்பினராக உதவியுள்ளார். முதல்வர் ரங்கசாமியும், நமச்சிவாயமும் உறவினர்கள். ரங்கசாமியின் அண்ணன் மகள் வசந்தி, நமச்சிவாயத்தின் துணைவியார். 

இலக்கை அடைந்தாரா? 

“வளமான புதுவை, வலிமையான பாரதம் என்பதே எனது நோக்கம். மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே ஆட்சி இருந்தால் வளமான புதுவை அமையும். அந்த வளர்ச்சியை கொடுக்க பாஜகவால்தான் முடியும் என்பதால், அக்கட்சியில் இணைந்தேன்” என பாஜகவில் இணைந்த உடன் பகிரங்கமாக சொல்லி இருந்தார் நமச்சிவாயம். 

“தற்போது புதுச்சேரி அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் நமச்சிவாயம், முதல்வருக்கு அடுத்த சீனியர் அமைச்சராக உள்ளார். முக்கிய இலாகா அவருக்கு ஒதுக்கப்படலாம் என்ற பேச்சுகளும் இப்போது எழுந்துள்ளன. கடந்த முறை பொதுப்பணித்துறை, கலால் துறை மாதிரியான முக்கிய துறைகளை அமைச்சராக நிர்வாகித்தவர். அவரது முயற்சியில் 60 சதவிகிதம் வெற்றி பெற்றுவிட்டார் என்று சொல்லலாம். ஏனெனில் புதுச்சேரி மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருப்பது இந்த மண்ணின் வளர்ச்சிக்கு வித்திடும். அதைதான் அவரும் செய்துள்ளார். நிதி மற்றும் நிர்வாக நெருக்கடி சிக்கலை தீர்க்க அவர் இந்த முடிவை எடுத்தார். அதில் வெற்றியும் பெற்றுள்ளார்” என்கிறார் புதுச்சேரியை சேர்ந்த ஜெகன்நாதன். 

என்ன ஆனது துணை முதல்வர் பதவி? 

என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி முதல்வர் என்பதால் பாஜக சார்பில் தங்களுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட வேண்டும் என்ற அழுத்தம் கொடுக்கப்பட்டது. இருப்பினும் அதற்கு முதல்வர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது. அதனால் பாஜக துணை முதல்வர் விஷயத்தில் கொஞ்சம் இறங்கி வந்துள்ளதாம். ஒருவேளை முதல்வர் துணை முதல்வர் பதவிக்கு சம்மதம் சொல்லி இருந்தால் அந்த நாற்காலி நமச்சிவாயத்திற்கு தான். 

இப்போதைக்கு அவர் முதல்வருக்கு அடுத்த இடத்தில் இருப்பதால் அவர் சொல்வதை போல புதுச்சேரிக்கு வளர்ச்சியை ஏற்படுத்தி கொடுப்பார் என்ற நம்பிக்கையில் உள்ளனர் புதுச்சேரி மக்கள். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com