“எல்லா ஆண்களையும் தப்பா நினைக்காதீங்க”-திருமண உறவும் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்களும்

“எல்லா ஆண்களையும் தப்பா நினைக்காதீங்க”-திருமண உறவும் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்களும்
“எல்லா ஆண்களையும் தப்பா நினைக்காதீங்க”-திருமண உறவும் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்களும்

திருமணத்திற்கு பிறகு கணவருடனான பாலியல் உறவில் பெண்களுக்கு விருப்பத்தை தெரிவிக்கும் உரிமை என்பது சம உரிமைகள் குறித்த தொடர் விவாதங்களில் முக்கியத்துவம் பெறுகிறது. இதுகுறித்து புதிய தலைமுறை நியூஸ் 360 நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்ட கருத்துக்களை பார்க்கலாம்.

பாலியல் உறவில் விருப்பத்தை தெரிவிக்கும் உரிமையை பெற நேரடி சட்டம் இயற்றப்படவேண்டும் என பெண் உரிமை போராளிகளின் தொடர்ந்து வலியுறுத்தும் நிலையில் எல்லா ஆண்களையும் பாலியல் வன்கொடுமையாளர்களாக பார்க்கமுடியாது என்கிறார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி. 

டெல்லி உயர் நீதிமன்றத்தில், பெண்கள் நலச் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்த பொதுநல வழக்கில், திருமணத்திற்குப் பிறகு பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களை தடுக்க சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரப்பட்டது. இதற்கு மத்திய அரசு தரப்பில் நீதிமன்றத்தில் பதிலளிக்கப்பட்டது. அதில், பல மேற்கத்திய நாடுகள் திருமணத்திற்கு பிறகான பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களை குற்றம் என அறிவித்துள்ளதை போல இந்தியாவும் கண்ணை மூடிக்கொண்டு அதைப் பின்பற்ற வேண்டியதில்லை எனவும், இதை செய்வதற்கு முன்னர் படிப்பறிவின்மை, பெரும்பாலான பெண்களின் பொருளாதார சுயசார்பின்மை, சமூக மனப்பான்மை, வறுமை என தாக்கத்தை ஏற்படுத்தும் பல விஷயங்களை பரிசீலிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பினோய் விஸ்வம் திருமண உறவில் நடக்கும் பாலியல் வன்முறை குறித்த கேள்வியை எழுப்பினார். அந்த கேள்விக்கு, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பதிலளித்தார். அப்போது நாட்டில் நடக்கும் ஒவ்வொரு திருமணத்தையும் வன்முறை என்று அறிவிக்கமுடியாது என்றார். நாட்டில் பெண்களுக்கு உதவி செய்ய முப்பதுக்கும் மேற்பட்ட அவசர உதவி எண்கள் உள்ளன என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பே அரசின் முன்னுரிமை என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பா.ஜ.க எம்.பி சுஷில் குமார் மோடி, திருமணத்திற்கு பிறகான பாலியல் வன்முறையை குற்றமாக்குவது திருமண நிகழ்வுகளையே முடிவுக்குக் கொண்டுவந்துவிடும் என்றும், திருமண உறவில் ஒரு மனைவி எப்போது சம்மதித்தாள், சம்மதிக்கவில்லை என்பதை நிரூபிப்பது கடினம் என்றும் கருத்து கூறியுள்ளார். மேலும், திமுக எம்பி எம்எம் அப்துல்லா மாநிலங்களவையில் இதை பற்றி பேசினார். அப்போது திருமணத்திற்கு பின்பு பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் அத்துமீறல்களும் குற்றமே என்றும், பெண்களுக்கும் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

உலக அளவில் 32 நாடுகளில், திருமண உறவுகளில் நடக்கும் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் தண்டிக்கப்படக்கூடிய குற்றமாக பார்க்கப்படவில்லை. அவற்றுள் இந்தியாவும் அங்கம் வகித்து வந்த நிலையில், இந்திய தண்டனைச் சட்டம் 375 பிரிவின் கீழ் உரிய சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு திருமணத்திற்குப் பிறகான பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல், குற்றம்தான் என்று கருதப்பட உள்ளது.

சில வருடங்களுக்கு முன்பாக சர்வதேச பெண்கள் அமைப்பு நடத்திய ஆய்வில் திருமணமானவர்களில் ஏறத்தாழ 20 சதவிகிதம் இந்திய ஆண்கள் தங்களது மனைவி மீது ஒரு முறையாவது பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தியாவில் 5 புள்ளி 6 சதவிகிதம் பெண்கள் தங்களது திருமண வாழ்க்கையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்றும் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

2017ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற "திருமண உறவில் பாலியல் துன்புறுத்தல்" குறித்த பொதுநல வழக்கில் தனது நிலைபாட்டை முன்வைத்த மத்திய அரசு, திருமண உறவில் பாலியல் அத்துமீறலை குற்றமாக அறிவிப்பது என்பது, குடும்பம் என்ற கட்டமைப்பைச் சிதைத்துவிடும் என்று கூறியிருந்தது. கணவனை துன்புறுத்த மனைவி சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தக்கூடும் என்றும் கூறியிருந்தது.

இது போன்ற பல வேறுபட்ட பார்வைகளையும், கருத்துகளையும் சட்ட ரீதியிலான சவால்களையும் கடந்து தற்போது பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் எந்த வகையில் நடைபெற்றாலும், கணவனால் நிகழ்த்தப்பட்டாலும் அது குற்றம் தான் என்று தற்போது உறுதியாகியுள்ளது. திருமணம் என்ற அமைப்பை கேடயமாக பயன்படுத்திக் கொண்டு பெண்களை துன்புறுத்தும் ஆண்களுக்கு இது ஓர் சவுக்கடியாகவும், திருமண வாழ்க்கையில் பாலியல் ரீதியாக துன்புறுத்தலைச் சந்திக்கும் இந்தியப் பெண்களைப் பாதுகாக்கவும் இச்சட்ட திருத்தம் அமையும் என்று நம்பலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com