மருத்துவர் மீது தாக்குதல் : நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று போராட்டம்
மேற்குவங்கத்தில் மருத்துவர் ஒருவர் தாக்கப்பட்டதை கண்டித்து இன்று நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப் போவதாக இந்திய மருத்துவ கூட்டமைப்பான ஐஎம்ஏ அறிவித்துள்ளது. மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த ஊழியர்களுக்கு எதிராக எந்த வடிவில் வன்முறை நிகழ்ந்தாலும், அதை தடுத்து நிறுத்துவதற்கு மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், இந்திய மருத்துவ கூட்டமைப்பான ஐஎம்ஏ, மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை தடுக்க மத்திய அரசு விரிவான சட்டத்தை இயற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
இதனைதொடர்ந்து மேற்குவங்கத்தில் மருத்துவர்களுக்கு எதிராக நடந்த வன்முறையை கண்டிக்கும் வகையில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை, மருத்துவத் துறையில் அவசரம் காலமில்லாத சேவைகள் நிறுத்தப்படும் என இந்திய மருத்துவ கூட்டமைப்பான ஐஎம்ஏ தெரிவித்துள்ளது. அதே சமயம், காயமடைந்தவர்களுக்கான சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட அவசரகால மருத்துவ சேவைகள் பாதிப்பு இல்லாமல் தொடரும் என்றும் ஐஎம்ஏ அறிவித்துள்ளது.
வேலைநிறுத்தத்தை கைவிட வேண்டுமென மேற்கு வங்க அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்ட போதும், உரிய நடவடிக்கையை உறுதி செய்யாமல் வேலைநிறுத்தம் கைவிடப்படாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவர்கள் மட்டும் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளும் முடிவை கைவிட்டு பணிக்கு செல்ல உள்ளதாகவும், போராட்டத்தில் கலந்து கொள்ளாவிட்டாலும் போராடும் மருத்துவர்களுக்கு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளனர்.