சத்தீஸ்கர் | குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட சிறுமி.. சிகிச்சை செய்த மருத்துவரின் நெகிழ்ச்சி செயல்!
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்திலிருந்து பிஜப்பூர் மாவட்டத்தை நோக்கி 90 கிலோமீட்டர் தொலையில் உள்ளது திமாபுரம் கிராமம். இங்கு தனது பெற்றோருடன் வசித்து வருகிறார் 10 வயது சிறுமி ஒருவர்.
இவர் கடந்த 12 ஆம் தேதி அதிகாலை அடுப்பு எரிப்பதற்காக குச்சிகளை எடுக்க காட்டுப்பகுதியை நோக்கி சென்றுள்ளார். அப்போது, அப்பகுதியில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை சிறுமி தொட்டதாக கூறப்படுகிறது.
வெடிகுண்டு வெடித்தநிலையில், சிறுமியின் முகம் மற்றும் வலது கை என உடலின் பல பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிலர், காயமடைந்த சிறுமியை மருத்துமனைக்கு அழைத்து செல்ல விரைந்தனர். ஆனால், பயணிக்க போதுமான சாலை வசதி இல்லாததால், டிராக்டரில் 10 கிலோமீட்டர் தூரம் அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் சுக்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அடுத்த நாள் காலை, 100 கிமீ தொலைவில் உள்ள ஜக்தல்பூர் மருத்துவமனையிலும், இறுதியாக 300 கிமீ தொலைவிலும் உள்ள ராய்ப்பூரில் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து, சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெரிவித்த அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் டாக்டர் சினில் கல்டா, ” சிறுமியின் முகம் கற்கள் மற்றும் வெடிமருந்துகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு லேசர் கிசிச்சையை பயன்படுத்தி, சேதம் அடைந்த திசுக்கள் அகற்றப்பட்டு, செயற்கை தோல் பொருத்தப்பட்டது.
இன்னும் அவருக்கு தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது. , ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பு தேவைப்படுகிறது. “ என்று கூறினார்.
இந்தநிலையில்தான், சிறுமியும், சிறுமியின் தந்தையும், சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய்யை சந்தித்தனர். அப்போது தெரிவித்த முதல்வர், ’சிறுமியின், கல்வி, மருத்துவ,திருமண செலவுகளை யாராவது பார்த்து கொண்டால் நன்றாக இருக்கும்’ என்றார்.
இதனை கேட்ட அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் கல்டா சிறுமியின் மருத்துவ சிகிச்சை, கல்வி மற்றும் திருமண செலவை தானே ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.
மேலும், ‘‘ முதல்வர் விஷ்ணு தியோ சாய்யின் யோசனை எனக்கு பிடித்தது. அந்த சிறுமியின் எதிர்கால செலவுகளை நானே ஏற்பேன்’’ என்றும் அவர் தெரிவிதார். இதை கேட்ட சிறுமியின் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். மருத்துவரின் நல்ல உள்ளத்தை கண்ட அனைவரும் அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.