இந்த அறிகுறிகள் இருந்தால் ’ADHD’ குறைப்பாடா?.. A - Z தகவல்களை புட்டு புட்டு வைக்கும் மருத்துவர்!

நடிகர் ஃபகத் ஃபாசில், கேரளாவின் கொத்தமங்கலம் அருகே உள்ள Peace Valley Children's Village என்ற இல்லத்துக்கு சென்றிருந்தார். அங்கு அவர், தனக்கு 41 வயதில் ADHD எனப்படும் ‘கவனக்குறைவு அல்லது அதிக செயல்பாடு குறைபாடு’ இருப்பதாக கூறியிருந்தார்.
ஃபகத் ஃபாசில்
ஃபகத் ஃபாசில்புதியதலைமுறை

பிரபல நடிகர் ஃபகத் ஃபாசில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 26) கேரளாவின் கொத்தமங்கலம் பகுதி அருகே உள்ள Peace Valley Children's Village என்ற குழந்தைகள் இல்லத்துக்கு நிகழ்ச்சியொன்றுக்காக சென்றிருந்தார். அங்கு பேசிய அவர், தனக்கு 41 வயதில் ADHD (Attention-deficit / hyperactivity disorder) எனப்படும் ‘கவனக்குறைவு அல்லது அதிக செயல்பாடு கோளாறு / குறைபாடு’ இருப்பது மருத்துவரீதியாக உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.

‘41 வயதில் இது ஏற்பட்டால், முழுமையாக குணமாகி மீண்டுவிட முடியுமா?’ என்று மருத்துவரிடம் தான் கேட்டதாகவும் கூறியிருக்கிறார் ஃபகத். அதற்கு பதிலளித்த மருத்துவர், “சிறு வயது குழந்தைகள் இத்தகைய நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக / விரைவாக அவர்களை குணப்படுத்திவிடலாம்” என்று கூறினாராம். இச்செய்தி வைரலானதைத் தொடர்ந்து, பலரும் இந்நோயினைப்பற்றிய சந்தேகங்களை மருத்துவர்களிடம் கேட்டு வருகின்றனர்.

இது குறித்து சிவகங்கையைச் சேர்ந்த Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர், தனது முகநூலில் பதிவு ஒன்றில் ADHD பற்றி எழுதியுள்ளார்.

”இன்று திரைப்பட நடிகர் திரு. ஃபஹத் ஃபாசில் 41 வயதில் தனக்கு ஏடிஹெச்டி எனும் மூளை சார்ந்த மனநலப் பிரச்சனை கண்டறியப்பட்டிருப்பதாகக் கூற அந்த டாபிக் வைரலாகி இருக்கிறது. ஏடிஹெச்டி ( ADHD ) என்பது அட்டென்சன் டெஃபிசிட் ஹைப்பர் ஏக்டிவ் டிசார்டர் என்பதன் சுருக்கமாகும்.

அந்தப் பெயரின் நேரடி தமிழாக்கம் கவனக்குறைவுடன் கூடிய அதீத துறுதுறுப்பை உண்டாக்கும் மூளை மனநலம் சார்ந்த பிரச்சனை என்பதாகும். பெரும்பாலும் இந்த பிரச்சனை , குழந்தைப் பருவத்தில் கண்டறியப்படும். சிலருக்கு வளர் இளம் பருவத்திலும் இன்னும் சிலருக்கு ஃபஹத் கூறுவது போல வயது முதிர்ந்த நிலையிலும் கூட கண்டறியப்படலாம்.

இதில் இரண்டு வகை உண்டு type A, type B

டைப் ஏ என்பது

துறுதுறுப்பற்ற கவனக்குறைவு ( INATTENTION WITHOUT HYPERACTIVITY)

அறிகுறிகள்

- கவனக்குறைவு

- வழிமுறைகளை பின்பற்றுவதில் கவனக்குறைவு / ஈடுபாடின்மை

- யாருடனும் கலந்து பழகாமல் / வெட்கத்தை அதிகம் வெளிப்படுத்துவது

- எளிதாக கவனச்சிதறலுக்கு உட்படுவது

- வழிமுறைகளுக்கு ஒத்துவராத இயல்பு

- முறையாக தனது பொருட்களைப் பேணாமை

- தனது உடமை மீது கவனமின்மை

- எதைக் கூறினாலும் மெதுவாக கூறப்படுபவற்றை உட்கொள்ளல்

டைப் பி

கவனக்குறைவற்ற துறுதுறுப்பு( HYPERACTIVITY WITHOUT INATTENTION)

அறிகுறிகள்

- எப்போதும் அதீத துறுதுறுப்பு

- ஒரு இடத்தில் உட்காராமல் அங்கும் இங்குமாக துறுதுறுவென இருப்பது

- அதீத பேச்சு

- சத்தமாகப் பிறரிடம் பேசுதல்

- தங்களது முறைக்காக காத்திருக்காமல் குறுக்க குறுக்க அடுத்தவரை பேச விடாமல் பேசுவது

- விரைவில் சினம் கொள்வது

இப்படியான அறிகுறிகளைக் கொண்ட குழந்தைகள் - பள்ளி கல்வியிலும் கவனக்குறைவுடன் இருப்பார்கள். கூடவே அதீத துறுதுறுப்புடனோ அல்லது தொய்வாகவோ இருப்பதால் பெற்றோர்கள் இவர்களை மருத்துவர்களிடம் காட்டி மனநல மருத்துவர்களிடம் பரிந்துரை பெற்று சிகிச்சை பெறுவார்கள்.

ஏடிஹெடி எனும் இந்த நிலைக்கு - சிறப்பான முன்னேற்றம் தரும் மருத்துவ சிகிச்சை முறைகள் இருக்கின்றன.

மாத்திரைகள்

மனோதத்துவ சிகிச்சை முறைகள்

ஆற்றுதல்படுத்துதல் சிகிச்சைகள்

என நல்ல முன்னேற்றம் கண்டு நோயைக்குணப்படுத்த முடியும்.

இப்போது வயதானவர்களுக்கு வரும் ஏடிஹெடி குறித்து காண்போம்

நான் கேட்கும் பின்வரும் ஆறு கேள்விகளுக்கு உங்களின் விடை என்ன என்று சிந்தியுங்கள்

கடந்த ஆறு மாதங்களாக உங்கள் வாழ்க்கையில் நடந்த விசயங்களில் இந்த ஆறு கேள்விகளை ஒப்பிட்டுப் பாருங்கள்.

முதல் கேள்வி

ஒரு ப்ராஜெக்ட் செய்து முடிக்கும் போது அதன் இறுதி வடிவத்தில் அதை முடிக்கும் போது கடினமாக உணர்ந்தீர்களா?

இரண்டாவது கேள்வி

சரியான வழிமுறையில் செய்து முடிக்க வேண்டிய விசயத்தில் , வரிசைப்படி செயலாற்றுவதில் கடினத்தன்மையை உணர்ந்தீர்களா?

மூன்றாவது கேள்வி

நீங்கள் சந்திக்க வேண்டிய நபர்கள் அல்லது முடிக்க வேண்டிய விசயங்கள் அல்லது அப்பாய்ண்ட்மெண்ட்களை மறந்தீர்களா?

நான்காவது கேள்வி

அதிகமாக சிந்தித்து செயலாற்ற வேண்டிய விசயங்களை அதன் கடினத்தன்மை கருதி தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தீர்களா? அல்லது அந்த செயலை செய்யாமல் தவிர்த்தீர்களா?

ஐந்தாவது கேள்வி

நீண்ட நேரம் ஒரு இடத்தில் அமர்ந்திருக்க வேண்டிய நிலையில்

உங்கள் கால்களை ஆட்டிக் கொண்டே இருப்பீர்களா? கைகளை பிசைந்து கொண்டே இருப்பது.. நாற்காலியில் இங்குமங்கும் அலைந்து கொண்டே இருப்பது.. ஆகியவற்றை செய்வீர்களா?

ஃபகத் ஃபாசில்
“41 வயதில் எனக்கு ADHD உறுதியானது” - நடிகர் ஃபகத் ஃபாசில்!

ஆறாவது கேள்வி

நீங்கள் அதீத துறுதுறுப்புடன் இருப்பதாகவும் / சில விசயங்களை உங்களது கட்டுப்பாட்டுக்கு மீறி செய்து விடுவதையும் உணர்கிறீர்களா?

மேற்கூறிய ஆறு கேள்விகளில் நான்குக்கு மேலான கேள்விகளுக்கு அடிக்கடி அப்படித்தான் தோணுது என்று நீங்கள் கூறுவீர்களானால்...

நீங்களும் மனநல மருத்துவரிடம் சென்று தங்களுக்கு ஏடிஹெச்டி பிரச்சனை இருக்கிறதா? என்பதை உறுதி செய்து சிகிச்சை பெறுவது நல்லது.

முறையான மருத்துவ மனநல சிகிச்சை பெறுவதும் மூலமும் உணவு - உடற்பயிற்சி - உறக்கம் - உள அழுத்தம் ஆகியவற்றை சரி செய்வதன் மூலமும் இந்த பிரச்சனையின் தாக்கத்தைக் குறைக்கலாம்.

- உங்களின் மனதுக்குப் பிடிக்காத செயல்களில் ஈடுபடும் போது கவனக்குறைவால் அடிக்கடி தப்பு செய்கிறீர்களா?

- யாரேனும் பாடம் நடத்தும் போது அல்லது உங்களுடன் நேருக்கு நேர் உரையாடும் போது கூட கவனச் சிதறல் ஏற்படுகிறதா?

- வீட்டில் உங்களது பொருட்களை அடிக்கடி வேறு இடங்களில் வைத்து விட்டு தேடுகிறீர்களா?

- வெளிப்புற சத்தங்கள் மற்றும் வெளிப்புற நடவடிக்கைகள் உங்களின் செயல்களில் குறுக்கீடு செய்கின்றனவா?

- ஒரு மீட்டிங் நடக்கும் போது நாற்காலியில் நீண்ட நேரம் அமர்ந்திருக்க வேண்டிய சூழல் இருக்கும் போதும் அடிக்கடி நாற்காலியை விட்டு எழுந்து செல்கிறீர்களா?

- எத்தனை முறை பதட்டமாகவும் அதீத துறுதுறுப்புடன் இருப்பதாக உணர்ந்தீர்கள்?

- தங்களால் ஓய்வு நேரத்தில் கூட ரிலாக்சாக இருக்க முடியவில்லையா?

- பொது இடங்களில் தேவைக்கும் அதிகமாக பேசுகிறீர்களா?

- உரையாடலில் பிறர் பேசிக் கொண்டிருக்கும் போது குறுக்கே பேசி அவரது வாக்கியங்களை நீங்கள் முடிக்கிறீர்களா?

- உங்களுக்கான முறை வரும் வரை காத்திராமல் முந்திக் கொண்டு உங்களது கருத்துகளை பேசுகிறீர்களா?

- அடுத்தவர் பணியில் பிசியாக இருக்கும் போது அவரது பணியில் குறுக்கீடு செய்கிறீர்களா?

மேற்சொன்ன பல கேள்விகளையும் கேட்டு அதற்கு பதிலளித்துப் பாருங்கள்

பல கேள்விகளுக்கு ஆமா நான் இப்டி தான் பண்ணிட்டு இருக்கேன். அடிக்கடி இது தான் நடந்துட்ருக்கு என்று கருதினால்ஏடிஹெச்டி குறித்து விழிப்புணர்வு பெற்று மனநல மருத்துவரிடம் நேரில் சென்று காட்டி மனநலப் பிரச்சனை இருப்பதாக வரும் உறுதிப்படுத்தினால் சிகிச்சை பெறவும்

நன்றி ”

என்று தனது முகநூலில் பதிவு செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com