வலியால் துடித்த கர்ப்பிணி - வீடியோ கால் மூலமாக பிரசவம் பார்த்த டாக்டர்..!
‘நண்பன்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கதையின் நாயகன் விஜய் தனது கல்லூரி வளாகத்திற்குள்ளேயே பிரசவ வலி ஏற்பட்ட பெண்ணுக்கு போன் மூலமாக டாக்டர் சொல்லியதை கேட்டு பிரசவம் பார்ப்பார். அந்த காட்சிகள் எல்லோருக்கும் நினைவு இருக்கும். அது போன்றதொரு நிகழ்வு கர்நாடகாவில் அண்மையில் நிஜ வாழ்க்கையிலும் நடந்துள்ளது.
கர்நாடகாவின் ஹவேரி மாவட்டத்தில் உள்ள சிறு நகரமான ஹனகல் பகுதியை சேர்ந்தவர் வாசவி. நிறை மாத கர்ப்பிணி. அடுத்த சில வாரங்களில் அவருக்கு குழந்தை பிறக்கும் என உத்தேசமாக தேதி குறித்து கொடுத்துள்ளனர் வாசவியின் மகப்பேறு மருத்துவர்கள்.
இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்றே அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அதனை அறிந்த வாசவியின் கணவர் ராகவேந்திரா ஆம்புலன்ஸை அழைத்துள்ளார். ஆனால் கொரோனா நோயாளியை அழைத்து வர அந்த பகுதியிலிருந்த ஆம்புலன்ஸ் சென்றிருந்ததால் அக்கம் பக்கத்திலிருந்த பெண்களை உதவிக்காக அழைத்துள்ளார்.
“ஆம்புலன்ஸ் வர நாற்பது நிமிடங்களுக்கு மேலாகும் என தெரிவித்தனர். அதனால் எங்கள் வீட்டுக்கு பக்கத்திலிருந்த பெண்களை உதவிக்கு அழைத்தேன்” என்கிறார் ராகவேந்திரா.
“நாங்கள் வாசவியை பார்த்த போது வலியால் மிகவும் துடித்துக் கொண்டிருந்தாள். ஆம்புலன்ஸ் வர நேரமாகியதால் உடனடியாக எங்களுக்கு தெரிந்த மகப்பேறு மருத்துவரான பிரியங்காவிற்கு வாட்ஸ் அப்பில் வீடியோ கால் செய்தோம். அதில் அனைத்து விவரங்களையும் அவரிடம் தெரிவித்தோம். பின்னர் போன் காலில் பேசிக் கொண்டே அவர் சொன்னதை ஒவ்வொன்றாக செய்து தாயையும், சேயையும் காப்பாற்றினோம்” என்கிறார் வாசவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த பெண்களில் ஒருவரான மதுலிகா.
வாசவி குழந்தையை பெற்றெடுத்த சில நிமிடங்களில் அம்புலன்ஸ் அவரது வீட்டுக்கு வந்துள்ளது. மேல் சிகிச்சைக்காக மருத்துவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.