“நான் மக்களின் மருத்துவர்” - ஒடிசாவில் ஒரு ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கும் டாக்டர்!
ஒடிசாவின் சாம்பல்பூர் மாவட்டத்தில் எளிய மக்களுக்கும் மருத்துவம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் ‘ஒரு ரூபாய்’ மருத்துவமனை ஒன்றை திறந்துள்ளார் மக்களின் மருத்துவர் ஒருவர். அங்குள்ள Burla பகுதியில் இயங்கி வரும் VIMSAR மருத்துவ கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் மருத்துவர் ஷங்கர் ராம்சந்தானிதான் இந்த செயலை செய்துள்ளார். பணி நேரம் போக மீதமுள்ள ஒய்வு நிறத்தில் எளிய மக்களுக்கு உதவும் வகையில் இதை தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
“முதலில் நான் VIMSAR -இல் பணிக்கு சேர்ந்தபோது எனது சீனியர் ரெசிடெண்ட் பதவியின் காரணத்தினால் மக்களுக்கான மருத்துவமனையை தொடங்க முடியவில்லை. தற்போது உதவி பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளதால் நான் தனியாக கிளினிக் தொடங்கலாம். வெகு நாளாகவே மக்களுக்கு நான் கற்ற மருத்துவக் கல்வியை கொண்டு உதவி செய்ய வேண்டுமென்ற ஆசை இருந்தது. இப்போது அது பூர்த்தி ஆகியுள்ளது. இந்த கிளினிக்கை வாடகை கட்டடத்தில் தான் தொடங்கியுள்ளேன்.
எளிய மக்களுக்கு உதவுவதற்கான வாய்ப்பாக இதை பார்க்கிறேன். மக்களிடம் ஒரு ரூபாய் வசூலிக்க காரணம் ‘நான் அவர்களிடம் இலவசமாக மருத்துவம் பார்க்கவில்லை’ என்பதை அவர்கள் உணரவும், என்னிடம் சந்தேகம் இருந்தால் கேட்பதற்கும் தான். நான் மக்களின் சேவகன்” என அவர் சொல்கிறார்.
கடந்த 12 ஆம் தேதியன்று இந்த கிளினிக்கை அவர் தொடங்கியுள்ளார். தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் தலா ஒரு மணி நேரம் வீதம் இந்த கிளினிக் இயங்குகிறது.