தாஜ்மஹாலை அழிக்க நினைக்கிறீர்களா? - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
உலகப்புகழ் பெற்ற தாஜ்மஹாலை அழிக்க நினைக்கிறீர்களா என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம்
கேள்வி எழுப்பியுள்ளது.
டெல்லியிலிருந்து மதுரா வரை ரயில் பாதை அமைப்பதற்காக, தாஜ்மஹாலை சுற்றியுள்ள 450 மரங்களை
வெட்டுவதற்காக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை
விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் மதன் லோகூர் மற்றும் தீபக் குப்தா, “தாஜ்மஹால் உலகப்புகழ்
பெற்றது. இதனை நீங்கள் அழிக்க நினைக்கிறீர்களா? நீங்கள் தாஜ்மஹாலின் தற்போதைய
புகைப்படங்களை பார்க்கவில்லையா? அப்படி இல்லையெனில் இணையத்தில் சென்று பாருங்கள்.
இதுபோன்ற செயலை தொடர்வீர்கள் என்றால், இந்திய அரசு தாஜ்மஹாலை அழிக்க விரும்புகிறது என
பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுங்கள்” என்று கடுமையாக சாடினர்.
முன்னதாக, சுற்றுச்சூழல் ஆய்வாளரான எம்.சி.மேத்தா உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், வரலாற்று
சிறப்புமிக்க தாஜ்மஹால் யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே,
தாஜ்மஹாலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியிருந்தார். இந்த மனுவை
ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் தாஜ்மஹால் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் சுற்றுச்சூழல் சீர்கேடு
அடையாமல் பாதுகாக்க அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.