
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று மக்களவையில் தொடங்கியது. இன்று மத்திய அரசுக்கு மீதான 2-ம் நாள் விவாதத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். பதவி நீக்கம் ரத்துக்குப்பின் ராகுல் காந்தி முதன்முறையாக இன்று அவையில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு பிரதமர் மோடி ஏன் செல்லவில்லை? மத்திய அரசு, தனது செயல்களால் இந்தியாவிலிருந்து மணிப்பூரையே பிரித்துவிட்டது.
பாரத மாதாவையே கொன்றுவீட்டீர்கள். மணிப்பூரில் ராணுவத்தை பயன்படுத்தினால் ஒரேநாளில் அமைதியை கொண்டுவரலாம். ராமாயணத்தில் கும்பகர்ணன் மற்றும் மேகநாதனின் பேச்சை மட்டுமே ராவணன் கேட்டார். மோடியும், அமித்ஷா மற்றும் அதானியின் பேச்சுகளை மட்டுமே கேட்கிறார். அந்த ராவணன் கூட மக்கள் பேச்சை கேட்டார். ஆனால் நீங்கள் கேட்கவில்லை” என கடுமையாக தனது குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, “ஊழல், வாரிசு அரசியலுக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். நீங்கள் இந்தியா கிடையாது. ஊழலை இந்தியாவிற்கு அறிமுகம் செய்தது காங்கிரஸ் தான். ஊழலைப் பற்றி பேசும் போது உங்கள் கூட்டணியில் இருக்கும் திமுகவைப் பற்றி பாருங்கள்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் திமுகவின் செய்தி தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனை தொடர்பு கொண்டோம். அவர் அளித்த பதில், “பாஜகவில் நடிகைகள் கோட்டா என்று ஒன்று உண்டு. ஸ்மிருதி இரானி நடிகைகள் கோட்டாவில் வந்ததினால் அவருக்கு திமுக வரலாறு தெரியாது.
திமுக 1967ல் ஆட்சியில் வந்ததில் இருந்து இன்று வரை எந்த ஒரு அமைச்சரோ அல்லது முன்னாள் அமைச்சரோ ஊழலில் தண்டிக்கப்பட்டவர் கிடையாது. ஆனால் ஸ்மிருதி இரானி இருக்கும் கட்சியில் தேசியத் தலைவர் ஊழலில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்தார், பங்கார் லட்சுமணா. ராணுவத் தளவாடம் வாங்கியதற்கான ஒரு லட்சம் டாலர் ஊழல் அது. அதன் பிறகு லோக் ஆயுக்தா என்ற ஒன்றை உருவாக்கி அதன்மூலம் பதவியை இழந்த முதலமைச்சர் எடியூரப்பா. இந்தியாவில் வேலை வாய்ப்பில் ஊழலை உருவாக்கி, 100 கோடி ஊழல் வெளியில் வந்து ஏறத்தாழ 130 பேரைக் கொன்ற ஊழல் செய்த மத்திய பிரதேசத்தின் சிவராஜ் சவுகான், அங்கன்வாடியில் ஏழைக் குழந்தைகளுக்கு சத்துணவுப் பொருட்கள் வாங்கப்பட்டதில் 200 கோடிக்கு ஊழல், இதை அனைத்தையும் விட ஸ்மிருதி இரானியிடமும், பாஜகவிற்காக பேசுபவர்களிடமும் நான் கேட்க விரும்புவது ஒன்று தான். ரஃபேல் விமானம் இந்தியாவின் பாதுகாப்பிற்காகத்தானே வாங்கினோம். அந்த விமானத்தின் ஃபைல் எங்கிருக்கிறது. அந்த விமானத்தின் ஃபைலையே பாதுகாக்க முடியாத பாதுகாப்புத்துறை அமைச்சரை வைத்துக்கொண்டுள்ளனர்.
ஸ்மிருதி இரானி நடிகை. அவர்களுக்கு அவ்வளவு தான் தெரியும். அரசியல் வரலாறு போன்றவைகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஸ்மிருதி இரானி பேசியதை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஆனால் மத்திய அமைச்சர் என்ற முறையில் அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டியுள்ளது. அதற்காக சொல்கிறேன். திமுகவின் வரலாறு தெரியாமல் இது போல் பேசுவதை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இன்று இந்தியா எனும் கூட்டணி அமைந்ததில் கேந்திர காரணமாக இருந்தது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான். காங்கிரஸ் இல்லாமல் பாஜக எதிர்ப்பு கூட்டணி நிறைவு பெறாது என தெளிவாக சொல்லி மம்தா, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியிடம் இருந்து மாறுபட்ட இயக்கங்களை ஒன்று திரட்டியதில் ஸ்டாலினுக்கு முக்கிய பங்குண்டு. எனவே அவர்களுக்கு திமுக என்றால் எரிச்சல் வருகிறது. நாங்கள் இதைப் பற்றி கவலைப் படப்போவதில்லை. அதிகபட்சம் அவர்களது ஆட்டம் இன்னும் 8 மாதம். அதன் பின் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க இருக்கிறது” என்றார்.