நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலாக மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த விஷயத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பதால், தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் இந்தியா (I.N.D.I.A) கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தன. இதை சபாநாயகர் ஓம்பிர்லா ஏற்றுக்கொண்டார். அதன்படி நாடாளுமன்றத்தில் இன்று மதியம் 12 மணிக்கு நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. தீர்மானத்தை ஆதரித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசினர்.
இதில் பேசிய திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, “மத்திய அரசுக்கு முழு பெரும்பான்மை இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியும். நாடாளுமன்றத்துக்கு பிரதமர் மோடியை வரவைக்க வேறு வழி இல்லாததால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளோம். தீமைகளை அழிக்க வேண்டும் என்பதற்காகவே நம்பிக்கையில்லா தீர்மானம்.
பிரதமர் அடிக்கல் நாட்டிய மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள், 5 ஆண்டுகளாகியும் இன்னும் தொடங்கப்படவில்லை. ரூ.15 லட்சம் கோடிக்கு பட்ஜெட் போடும் மத்திய அரசு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.2,000 கோடிகூட ஒதுக்க முடியவில்லை.
பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் வேலையின்மை அதிகரித்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
பெரும்பான்மை மக்களை வைத்து சிறுபான்மையின மக்களின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் வழங்குவோம், வேலை வாய்ப்பு, உள்ளிட்ட எந்த வாக்குறுதியையும் மோடி அரசு நிறைவேற்றவில்லை.
இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்பதில் பாஜக அரசு தோல்வி அடைந்துவிட்டது. சட்டமன்றம், நாடாளுமன்றத்தில், பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு தவறிவிட்டது.
இலங்கை அரசியல் சட்டத்தில் 13வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
160 ஆண்டு கனவுத் திட்டமான சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை பாஜக அரசு கிடப்பில் போட்டது ஏன்? காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதால் நிறைவேற்றப்படாமல் உள்ளது.
டீசல் விலையை மத்திய அரசு குறைக்காதது ஏன்?
குஜராத்தில் பெரும்பான்மை - சிறுபான்மையினர் மோதல் நடந்ததைப்போல மணிப்பூரிலும் நடைபெறுகிறது” என குற்றச்சாட்டுகளை அடுக்கி பேசினார்.