ரயில்வேயை தனியாருக்கு தாரைவார்ப்பது மக்கள் நலனுக்கு எதிரானது: டி.ஆர்.பாலு எம்.பி கண்டனம்
109 வழித்தடங்களில் பயணிகள் ரயில்களை இயக்க தனியார் துறைக்கு, மத்திய ரயில்வே அமைச்சகம் அழைப்பு விடுத்தற்கு டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள போக்குவரத்து சேவைகளில் ரயில் சேவை மட்டுமே தனியார் மயமாக்கப்படாமல் முற்றிலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயக்கப்பட்டு வந்தது. இதனிடையே கடந்த சில ஆண்டுகளாக பயணிகள் ரயில் போக்குவரத்தில் ஆண்டிற்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதனை அடுத்து பாதிப்பை குறைக்க சில வழித்தடங்களில் தனியார் ரயிலை இயக்குவதற்கு அனுமதி வழங்குவது என மத்திய அரசு முடிவு செய்தது.
இதனைத்தொடர்ந்து நாட்டின் 109 வழித்தடங்களில் பயணிகள் ரயில்களை இயக்க தனியார் துறைக்கு, மத்திய ரயில்வே அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. தனியார் துறை முதலீடு மூலம், 30 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் வரும் என எதிர்பார்க்கப்படுவதாக, ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ரயில்வே துறையை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து டி.ஆர்.பாலு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “நாட்டின் மலிவான போக்குவரத்து வசதியான ரயில்களை தனியாருக்கு தாரைவார்ப்பது மக்கள் நலனுக்கு எதிரானது. 109 வழித்தடங்களில் பயணிகள் ரயில்களை இயக்க தனியார் துறைக்கு, மத்திய ரயில்வே அமைச்சகம் அழைப்பு விடுத்தது மிகவும் கண்டனத்திற்குரியது.
வருவாயை பெருக்க தேசிய சொத்துக்களை விற்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. இதனால் லட்சக்கணக்கான குடிமக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். எனவே மத்திய அரசு இதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.