“கோ மூத்திர மாநிலங்கள்”-திமுக எம்பி செந்தில்குமார் பேச்சால் வெடித்த சர்ச்சை! நடந்ததுஎன்ன? முழுவிபரம்

பசு குறித்து மக்களவையில் திமுக எம்.பி செந்தில்குமார் பேசிய கருத்து மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
எம்.பி செந்தில்குமார்
எம்.பி செந்தில்குமார்ani

மக்களவையில் பேசிய திமுக எம்.பி.

5 மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், நேற்று (டிச.4) தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வருகிற டிசம்பர் 22ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், 19 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மக்களவையில் இன்று (டிச.5) பேசிய திமுக எம்.பி. செந்தில்குமார், ”இந்தி பேசும் மாநிலங்களை நாங்கள் பொதுவாக ’கோ மூத்திர மாநிலங்கள்’ (கௌமுத்ரா) என்று அழைப்போம். அங்கு நடக்கும் தேர்தல்களில் மட்டுமே இந்த பாஜகவுக்கு வெற்றி கிடைக்கிறது" எனப் பேசியிருந்தார்.

எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ்! 

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக அமோக வெற்றி பெற்றதையும், தமிழகம், கேரளா, ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய தென் மாநிலங்களில் பாஜக அடைந்த தோல்விகளையும் சுட்டிக்காட்டி திமுக எம்.பி. செந்தில் குமார் இவ்வாறு பேசியிருப்பது கடும் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. இவருடைய பேச்சுக்கு பாஜக தரப்பில் கண்டங்கள் குவிந்து வருகின்றன.

எம்.பி. செந்தில்குமார் பேசியது தொடர்பாகப் பதிலளித்த காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, 'கோ மூத்திர மாநிலங்கள்' தொடர்பாக, மக்களவையில் அவர் பேசியதற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அது அவரது சொந்த கருத்து. ஆனால், கௌமுத்ராவை நாங்கள் மதிக்கிறோம்” எனப் பதில் தந்துள்ளார்.

மற்றொரு காங்கிரஸ் எம்.பியான ராஜீவ் சுக்லா, ”திமுகவின் அரசியல் வேறு. காங்கிரஸின் அரசியல் வேறு. இந்த விஷயத்தில் காங்கிரஸ் உடன்பாடு கிடையாது. காங்கிரஸ் கட்சி, சனாதன தர்மத்தையும், கௌமதாவையும் நம்புகிறது. நாங்களும் நம்புகிறோம். அனைத்து மதத்தினரையும் இணைத்து முன்னேறுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிரிஷ்ணம் கூறுகையில், “திமுக தலைவர்கள் தொடர்ந்து இதோபோன்று சனாதன தர்மத்திற்கு எதிராக பேசிக் கொண்டிருந்தால், பாஜக “கோ மூத்திர மாநிலங்கள்”-ல் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களில் ஆட்சி அமைக்கும்” என்று கூறினார்.

இவர் சனாதன தர்மம் விவகாரத்திலும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதரவளித்த வைகோ... ஆனால் மன்னிப்பு கேட்ட திமுக எம்.பி

அதுபோல் மற்றொரு காங்கிரஸ் எம்.பியான கார்த்தி சிதம்பரம், ”இது மிகவும் அவமரியாதையான வார்த்தை. அவர், உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் தாம் பேசிய கருத்துக்களைத் திரும்பப் பெற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

அதேநேரத்தில் கௌமுத்ரா தாம் ஏற்றுக்கொள்வதாக மதிமுக பொதுச்செயலாளரும் எம்.பியுமான வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ”அவரது கருத்தை, நான் ஏற்றுக்கொள்கிறேன். அவர் சொல்வது சரிதான்” எனக் கூறியுள்ளார்.

திமுக எம்.பியின் இந்த கருத்துக்கு காங்கிரஸும் கடுமையான ஆட்சேபனை தெரிவித்திருப்பதை அடுத்து, தற்போது அதற்கு செந்தில்குமார் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தன்னுடைய எக்ஸ் வலைத்தளத்தில், “ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து கூறிய நான், தவறான பொருள் அளிக்கும் வகையில் ஒரு சொல்லைப் பயன்படுத்தி விட்டேன். எந்த உள்நோக்கத்துடனும் அந்த சொல்லை பயன்படுத்தவில்லை. அது தவறான பொருள் தருவது என்பதால் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

திமுக எம்பியின் கருத்துக்கு காங்கிரஸ் ஆதரவளிக்காதது ஏன்?

திமுக எம்பி செந்தில்குமாரின் இந்தக் கருத்துக்கு உடனடியாக காங்கிரஸ் பதில் கொடுத்திருப்பதும் நாடு முழுவதும் பேசுபொருளாகி உள்ளது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த வடமாநிலங்களான மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. ஆட்சியில் இருந்த ராஜஸ்தானும், வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையில் இருந்த சத்தீஸ்கரும் கைநழுவிப் போனதால் காங்கிரஸுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

காங்கிரஸ் - பாஜக
காங்கிரஸ் - பாஜக முகநூல்

இதற்கு, கடந்த காலங்களில் I-N-D-I-A கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுகவைச் சேர்ந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மம் குறித்துப் பேசியதும், அதற்கு மவுனம் காத்த காங்கிரஸுமே காரணம் என விமர்சிக்கப்பட்டது. இதையடுத்தே, தற்போது பசு குறித்து விவகாரத்தில் உடனடி பதில் தந்திருக்கிறது. வடமாநிலங்களில் பசுவை வைத்தே அரசியல் நடத்தப்படுகிறது என்பதும், முக்கியமாக, பசுவை வைத்து பல அறிவிப்புகள், நடந்த முடிந்த இந்த மாநில தேர்தல்களில் வெளியிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com