”ஒத வாங்கப்போற நீ”-நேற்று கனிமொழி..இன்று ஆ.ராசா.. இடைமறித்த பாஜக எம்பிக்கள்! கொந்தளித்த தயாநிதிமாறன்

நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத் தொடரில் திமுக எம்.பி. ஆ.ராசாவைப் பேசவிடாமல் பாஜக எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
kanimozhi, A.raja, dayanidhi maran
kanimozhi, A.raja, dayanidhi maranPT

சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் நிறைவேறிய மகளிர் இடஒதுக்கீடு மசோதா!

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் கடந்த 18ஆம் தொடங்கியது. இந்தச் சிறப்புக் கூட்டத்தின் இரண்டாவது நாளான செப். 19ஆம் தேதி, மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த மசோதா மீதான விவாதம் செப். 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெற்று வந்தது. நேற்று (செப்.20) முழுக்க இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்ற நிலையில், பின்னர் மசோதா நிறைவேறியது.

கனிமொழியைப் பேசவிடாமல் செய்த பாஜக எம்.பிக்கள்!

இந்த நிலையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தின்போது திமுக எம்.பி. கனிமொழி நேற்று (செப்.20) பேச முயன்றபோது பாஜக எம்.பிக்கள் கூச்சலிட்டனர். பாஜகவினர் கனிமொழியைப் பேசவிடாமல் செய்தது, திமுக எம்.பிக்களுக்கு மட்டுமல்லாது, மற்ற எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் குறிப்பாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பியான சுப்ரியா சுலே கோபமடைந்தார். ’அவர்களுக்கு அப்படி என்ன அவசரம்’ எனக் கேள்வியெழுப்பினார். திமுக எம்பி தயாநிதி மாறனும் தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்தார்.

’நீங்க என்ன பேசினாலும் புரியாது’ - தமிழில் பதிலளித்த கனிமொழி

அப்போது கனிமொழியும் சபாநாயகர் ஓம் பிர்லாவை நோக்கி, ‘என்ன சார் இது’ என ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து கனிமொழிக்கு ஆதரவாக சுப்ரியா சுலேவும் பேசினார். இதையடுத்து, கனிமொழி ஆங்கிலத்திலும் தமிழிலும் பாஜகவினரை நோக்கி கண்டனம் தெரிவித்தார். ’நீங்க என்ன பேசினாலும் புரியாது. ஏன் புரியாம பேசுற” என பாஜகவினரை நோக்கி கேள்வியெழுப்பினார்.

அதன்பின்பும் பாஜகவினரின் அமளி சிறிதுநேரம் தொடர்ந்தது. இதையடுத்து சபாநாயகர் அவர்களை உட்காரச் சொன்னார். பாஜகவினர் ஒருவழியாக அமைதியானதைத் தொடர்ந்து, கனிமொழி தனது பேச்சைத் தொடங்கினார்.

திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு எதிராக அமளி! கோபப்பட்ட தயாநிதி மாறன்!

அதேபோல், இன்று (செப்.21) நடைபெற்ற சந்திரயான் வெற்றி உள்ளிட்ட விவாதத்தின்போதும் திமுக எம்.பி. ஆ.ராசா பேச்சை தொடங்கிய உடனேயே அவருக்கு எதிராக பா.ஜ.க எம்.பிக்கள் கூச்சலிட்டனர். அவர், தன்னை மக்களவையில் பேச அழைத்ததற்கு நன்றி தெரிவித்துக்கொண்டு பேச்சைத் தொடங்கியபோது, பாஜகவினர் சிலர் கூச்சலிட்டனர். அப்போது, ஆ.ராசாவுக்குப் பின்னால் அமர்ந்திருந்த திமுக எம்.பி. தயாநிதி மாறன், கோஷமிட்டவர்களை நோக்கி, ’நீ உதை வாங்கப்போற.. உட்கார், உட்கார். அவ்ளோதான், என்ன... என்ன? என்ன பேசுற’ எனக் கேட்டு ஆவேசமடைந்தார்.

பாஜகவினரை அமைதிப்படுத்திய அவைத்தலைவர்

தொடர்ந்து பாஜகவினர் கூச்சலிட்ட நிலையில், அவைத்தலைவர் அவர்களை அமரச் சொன்னார். மறுபுறம், ஆ.ராசாவைப் பேசுமாறும் வலியுறுத்தினார். ஆனால், அவர்கள் தொடர்ந்து கூச்சலிட்டப்படியே இருந்தனர். இதையடுத்து, ‘இவ்வளவு அமளிக்கிடையே எவ்வாறு பேசுவது’ என ராசா கேள்வி எழுப்பினார். பின்னர் கோஷம் எழுப்பியவர்களிடம், ’உங்களுக்கு என்னதான் வேண்டும். உட்காருங்கள்’ என்று அவைத்தலைவர் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவர்கள் விடுவதாக இல்லை. தொடர்ந்து கூச்சலிட்டப்படியே இருந்தனர்.

ஆ.ராசா, தயாநிதி மாறன்
ஆ.ராசா, தயாநிதி மாறன்ட்விட்டர்

’என்னய்யா.. நீ மந்திரிதானே?’ - அவையில் ஓங்கி ஒலித்த குரல்!

ஒருகட்டத்தில் ஆ.ராசாவுக்கு எதிராகக் கோஷம் அதிகமான நிலையில், அவையில் இருந்து ’என்னய்யா.. என்னய்யா.. நீ மந்திரிதானே.. நீ மந்திரிதானே’ என குரல் ஒலித்தது. ஒருகட்டத்திற்குப் பிறகு, அவை அமைதியான பிறகு, ஆ.ராசா பேச ஆரம்பித்தார்.

அப்போது பேசிய அவர், ‘உடல்நிலை குறிப்பாக தொண்டை சரியில்லாததால் பேச வேண்டாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், இங்கே பேச வேண்டியது அவசியம் என்று கருதியதால் பேசுகிறேன்’ என்றவர் சந்திரயான் வெற்றிக்கு பிரதமர் மோடிக்கும் மத்திய அரசுக்கும் நன்றியைத் தெரிவித்தார். அத்துடன் பல்வேறு விமர்சனங்களையும் முன் வைத்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com