DMK Criticizes Move to Remove French from Puducherry Schools
StudentsPt web

புதுச்சேரி | சிபிஎஸ்இ பள்ளிகளில் பிரெஞ்சு மொழி நீக்கம்.. திமுக கண்டனம்.!

புதுச்சேரி சிபிஎஸ்இ பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் பிரெஞ்சு மொழி நீக்கப்படுவது கலாசாரச் சிதைவு என திமுக குற்றம்சாட்டியுள்ளது.
Published on

பிரெஞ்சு காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்து விடுதலைப் பெற்ற பகுதி புதுச்சேரி. அங்கு, தற்போது பள்ளி கல்லூரிகளில் பிரெஞ்சு மொழி கற்பிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரிக்கென தனிப்பாடத்திட்டம் இல்லாத நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தமிழ்நாடு பாடத்திட்டமும், மாகி பகுதியில் கேரளா பாடத்திட்டமும், ஏனாம் பகுதியில் ஆந்திரா பாடத்திட்டமும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தான், தற்போது புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் சிபிஎஸ்இ நடைமுறைக்கு மாற்றாப்பட்டு வருகின்றன.

CBSE
CBSEX

புதியக் கல்விக் கொள்கையின் மூலம், மத்தியரசு மும்மொழி பாடத்திட்டத்தை கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி, இரண்டு இந்திய மொழிகளையும், ஒரு வெளிநாட்டு மொழிகளையும் கற்க வேண்டும். இந்த நிலையில் தான், புதுச்சேரியில் 2026 - 2027 ஆம் கல்வியாண்டு முதல் பாடத்திட்டத்தில் இருந்து பிரெஞ்சு மொழி நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது பேசு பொருளாகியிருக்கிறது. அரசின் முடிவால், மாநிலத்தின் தனித் தன்மையும், இதுவரை பிரெஞ்சு மொழி படித்து வந்த மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படும் என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

DMK Criticizes Move to Remove French from Puducherry Schools
ஆட்சியா.. தொகுதியா? இரட்டை அழுத்தம் கொடுக்கும் பாஜக.. பவானிபூரை தக்கவைப்பாரா மம்தா?

இதுகுறித்து, புதுச்சேரி சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், மாநில கழக அமைப்பாளருமான இரா. சிவா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், சிபிஎஸ்இ பள்ளிகளில் 2026-27 கல்வியாண்டு முதல், ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழியைக் கட்டாயமாக்கும் புதிய அறிவிப்பை ஒன்றிய அரசு CBSE வெளியிட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக, 'தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு 2023'-ன் பரிந்துரைகளை அமல்படுத்துவதாகக் கூறி, மாணவர்களிடையே பன்மொழித் திறனை வளர்க்கிறோம் என்ற பெயரில் மும்மொழிப் பாடத்திட்டத்தின் திணிப்பினால், ஒரு வெளிநாட்டு மொழி, இரு பிராந்திய மொழிகள் படிக்கலாம் என்று சொல்லி, ஆங்கிலத்தை மட்டும் வைத்துக்கொண்டு, பிரெஞ்சு பாடம் நீக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களின் கல்விச் சுமையை அதிகரிப்பதோடு, அவர்களின் இயல்பான கற்றல் முறையையும் பாதிக்கும் செயலாக அமைந்துள்ளது.

 இரா. சிவா
இரா. சிவா

இந்த திடீர் அறிவிப்பைச் செயல்படுத்த பள்ளிகளுக்கு மிகக் குறுகிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சுற்றறிக்கை வெளியான ஏழு நாட்களுக்குள் அனைத்துப் பள்ளிகளும் இந்த முறையைக் கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்றும், அது குறித்த விவரங்களை உடனடியாக சிபிஎஸ்இ இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்றும் அனைத்து சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதுமான தயாரிப்புகள் இன்றி, பாடம் எடுக்க புத்தகங்கள் கூட இன்றி, இவ்வளவு அவசரமாக ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவருவது கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆறாம் வகுப்பில் மாணவர்கள் தேர்வு செய்யும் இந்த மூன்றாவது மொழிதான், பிற்காலத்தில் அவர்களின் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான விருப்பத் தேர்வாக அமையும் என்று சிபிஎஸ்இ வாரியம் நிபந்தனை விதித்துள்ளது.

DMK Criticizes Move to Remove French from Puducherry Schools
தாக்கும் வெப்ப அலை.. மலைவாசஸ்தலங்களுக்கு டூர் போறீங்களா? இதை கவனத்தில் கொள்ளுங்கள்!

மேலும், முறையான பாடப்புத்தகங்கள் அரசு சார்பில் இன்னும் தயாராகாத நிலையில், உள்ளூரில் கிடைக்கும் புத்தகங்களைக் கொண்டே வகுப்புகளைத் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தகைய ஒரு கட்டாய நடைமுறையை சிபிஎஸ்இ இயக்குனர் டாக்டர் பிரக்யா எம். சிங் வலியுறுத்தியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. இந்த அறிவிப்பு புதுச்சேரி மண்ணின் தனித்துவமான பிரெஞ்சு கலாச்சார அடையாளத்தையும் அதன் நீண்டகால மொழி வரலாற்றையும் சிதைக்கும் வஞ்சகச் செயலாகும். பிரெஞ்சு மொழியைத் தங்கள் வாழ்வியலின் ஒரு பகுதியாகக் கொண்டுள்ள புதுச்சேரி பூர்வகுடி மக்களின் உரிமையை இது நேரடியாகப் பறிக்கிறது.

மேலும், பல ஆண்டுகளாக பிரெஞ்சு மொழி பயிற்றுவித்து வரும் ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தையும், அவர்களின் வேலைவாய்ப்பையும் இந்தத் தன்னிச்சையான முடிவு கேள்விக்குறியாக்கியுள்ளது. ஒன்றிய பாஜக அரசின் இந்த நடவடிக்கை நாட்டின் பன்முகத்தன்மைக்கு விடுக்கப்பட்ட சவாலாகும். குறிப்பாக, புதுச்சேரி மாநிலத்தின் மலையாளம் பேசும் மாஹே மற்றும் தெலுங்கு பேசும் ஏனாம் பகுதி மாணவர்கள் மீது அவர்களின் விருப்பத்திற்கு மாறாக இந்தி அல்லது சமஸ்கிருதத்தைக் கட்டாயமாகத் திணிப்பது மொழிச் சிறுபான்மையினரின் உரிமைகளை நசுக்கும் செயலாகும். இது மாணவர்களின் இயல்பான மொழித் திறனைப் பாதிப்பதோடு, பெற்றோர்களிடையே தேவையற்ற குழப்பத்தையும் அச்சத்தையும் உண்டாக்கும் என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

பேரறிஞர் அண்ணா அவர்கள் வகுத்துத் தந்த இருமொழிக் கொள்கையே (தமிழ் மற்றும் ஆங்கிலம்) மாணவர்களின் எதிர்காலத்திற்கும் மாநில உரிமைகளுக்கும் உண்மையான பாதுகாப்பு என்பதைத் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மக்களின் விருப்பத்தைக் கேட்காமல் எடுக்கப்பட்டுள்ள இந்தத் தன்னிச்சையான முடிவை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். பன்முகத்தன்மையைச் சிதைக்கும் இத்தகைய எதேச்சதிகார மொழித் திணிப்பு நடவடிக்கைகளை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கல்வி துறையை கண்டித்து மிகப்பெரிய மொழி உரிமை போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

DMK Criticizes Move to Remove French from Puducherry Schools
மே 4 | வாக்கு எண்ணிக்கை நடைமுறைகள் வெளியீடு..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com