நரிக்குறவர்களை பழங்குடிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் - திமுக, அதிமுக எம்பிக்கள் கோரிக்கை

நரிக்குறவர்களை பழங்குடிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் - திமுக, அதிமுக எம்பிக்கள் கோரிக்கை
நரிக்குறவர்களை பழங்குடிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் - திமுக, அதிமுக எம்பிக்கள் கோரிக்கை

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் நரிக்குறவர்களை பழங்குடிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மாநிலங்களவையில் திமுக மற்றும் அதிமுக எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

புதன்கிழமையன்று ஜார்க்கண்ட் மாநில பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடி பட்டியலில், மாற்றங்கள் செய்வதற்கான அரசியல் சாசன திருத்த மசோதா மீதான விவாதம் நடைபெற்ற போது, இந்த கோரிக்கையை தமிழகத்தின் இரு பிரதான கட்சிகளும் முன்வைத்து, மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டன.

நரிக்குறவர்கள் மட்டுமல்லாது, தமிழகத்தைச் சேர்ந்த மீனவ மக்களும் பழங்குடி இனத்தவர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என அதிமுக சார்பாக தம்பிதுரை கோரிக்கை வைத்தார். வால்மீகி மற்றும் படுகா போன்ற சமூகங்களுக்கும், பழங்குடி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

தமிழக மீனவர்கள் "கடல்சார் பழங்குடிகள்" என மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என தம்பிதுரை வலியுறுத்தினார். திமுக சார்பாக பேசிய ராஜேஷ்குமார், தமிழகத்தை சேர்ந்த நரிக்குறவர்கள் பழங்குடிகள் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதை குறிப்பிட்டார்.

விரைவாக இந்தக் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் ஜார்க்கண்ட் மாநில பட்டியலை மட்டும் திருத்த மசோதா கொண்டு வராமல், தமிழக பட்டியலையும் திருத்துவதற்கான மசோதாவை நிறைவேற்றி நரிக்குறவர் சமுதாயத்திற்கு பழங்குடி அந்தஸ்து வழங்கி இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த மசோதாவுக்கு ஆதரவு அதிகரிக்கும்போது, நரிக்குறவர்களின் கோரிக்கை எப்போது நிறைவேறும் என்கிற கேள்வியும் எழுகிறது என ராஜேஷ்குமார் குறிப்பிட்டார். பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் ஜார்கண்ட் மாநில பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடிகள் பட்டியலை செலுத்தும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த மசோதா மக்களவையில் விவாதிக்கப்பட்டபோது திமுக சார்பாக பேசிய ஆ ராசா, ஒவ்வொரு மாநிலமாக பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடி பட்டியலில் மாற்றம் செய்வதை விட, அனைத்து மாநிலங்களில் பட்டியல்களையும் ஒன்றாக பரிசீலித்து மாற்றங்களை செய்யலாம் என ஆலோசனை வழங்கினார்.

மேலும், மக்களவையில் பட்டய கணக்காளர்களுக்கான சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவில் பல மாற்றங்கள் கோரிய நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்.

மாநிலங்களவையில் மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்புகளுக்கான துறையின் செயல்பாடு குறித்து விவாதம் நடைபெற்றது. திமுக உறுப்பினர் சண்முகம் இந்த விவாதத்தை தொடக்கிவைத்து, தொழிலாளர்களின் நலன் காக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

வியாழக்கிழமையன்று மாநிலங்களவையில் ஓய்வுபெற உள்ள உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்படும் என அவைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். இதனால் கேள்வி நேரம் உள்ளிட்ட காலை நேர அலுவல்கள் நடைபெறாது எனவும், ஓய்வுபெறும் உறுப்பினர்களுக்கு பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

- கணபதி சுப்ரமணியம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com