முதல்வர் ரேஸில் முந்துவது யார்? ‘போனமுறை நான் அவங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்ததால..’- டி.கே.சிவகுமார்

கர்நாடக முதல்வரை காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமை முடிவு செய்யும் என எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
MLAs meeting
MLAs meetingpt desk

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக கடந்த 10 ஆம் தேதி முடிந்தது. இதையடுத்து 13 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. இந்நிலையில், கடந்த 36 ஆண்டுகளுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.

congress MLAs
congress MLAspt desk

இதனிடையே கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுவரை முதல்வர் வேட்பாளரை யார் என்று காங்கிரஸ் கட்சி அறிவிக்காத நிலையில், டி.கே.சிவகுமார் மற்றும் சித்தராமையா ஆகியோர் இடையே முதல்வர் பதவிக்கான போட்டி நிலவுகிறது. ‘முதல்வர் பதவியை கட்சி வழங்கினால் ஏற்றுக் கொள்வேன்’ என்று முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வரும் கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று பெங்களூருவில் உள்ள தனியார் விடுதியில் கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றறது. இந்த கூட்டத்தில் 135 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மற்றும் 3 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்திற்கு மூத்த தலைவர்கள் சுஷில் குமார் ஷிண்டே, தீபக் பவாரியா, பன்வர் ஜிதேந்திர சிங் ஆகியோர் மேலிட பார்வையாளர்களாக இருக்க, கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி.கே.சிவகுமார் தலைமையேற்று நடத்தினார்.

congress MLAs
congress MLAspt desk

முன்னதாக மேலிட பார்வையாளர்கள், சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் ஆகியோர் தனி அறையில் ஆலோசனை நடத்தினர். அப்போது கூட்டத்தில், ‘100 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு எனக்கு இருக்கிறது; ஆகையால் எனக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும்’ என சித்தராமையா வலியுறுத்திய நிலையில், நேரடியாக ‘முதல்வர் பதவியை எனக்கு அறிவிக்க வேண்டும்’ என டி.கே.சிவகுமார் வலியுறுத்தினார்.

இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கர்நாடக முதல்வர் பதவியை அனைத்திந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை முடிவு செய்யும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய டி.கே.சிவகுமார், “கடந்த முறை நான் அவருக்கு (சித்தராமையா) ஒத்துழைப்பு அளித்தேன். ஆகவே இம்முறை அவர் எனக்கு அளிப்பார்” என்று பேசியதாக தெரிகிறது. இதனால் டி.கே.சிவகுமார் முதல்வராகப் போகிறாரா, அவர்தான் ரேஸில் முந்துகிறாரா என யூகங்கள் எழுப்பப்படுகின்றன. இது முதல்வர் ரேஸை மேலும் பரபரப்பாக்கி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com