மம்தாவை முடித்துவிட்ட அதிருப்தி கோஷ்டி.. தலைவர் பதவியிலிருந்து நீக்கம்.. கட்சியைப் பறிக்க முடிவு?
மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் பலத்த தோல்வியடைந்தது. மேலும், தாம் போட்டியிட்ட தொகுதியிலேயே அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மம்தா பானர்ஜியே தோல்வியடைந்தார். இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் கோட்டை தகர்க்கப்பட்டு, முதன்முறையாக பாஜக ஆட்சியைப் பிடித்தது. அதேநேரத்தில், தேர்தல் தோல்வி காரணமாக திரிணாமுல் காங்கிரஸின் மூத்த உறுப்பினர்கள் பலரும் கட்சி மீதும் தலைமை மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். தவிர, கட்சிப் பதவிகளிலிருந்தும் வெளியேறி வருகின்றனர். இதனால் திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபட்டது. குறிப்பாக, அக்கட்சியின் 61 எம்எல்ஏக்கள் மம்தாவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர். தவிர, அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ரிதாபிரதா, 61 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் எதிர்க்கட்சித் தலைவராகி இருக்கிறார். இன்னொரு புறம் அவர் கட்சியைச் சேர்ந்த எம்பிக்களில் 28 பேரில் 20 பேரும் மம்தாவுக்கு எதிராக திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில்தான், கொல்கத்தாவில் ரிதாபிரதா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 60க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள், பல்வேறு மாநகராட்சிகளில் பதவி வகிக்கும் 70 கவுன்சிலர்களும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து மம்தா பானர்ஜியை நீக்குவதாக அறிவித்த அக்கட்சியின் அதிருப்தி கோஷ்டி தலைவர் ரிதாபிரதா பானர்ஜி அவருக்குப் பதிலாக, ஹவுரா மத்திய தொகுதி எம்எல்ஏவான அரூப் ராய் புதிய தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதேபோல், மம்தாவின் மருமகனும் கட்சியின் தேசிய பொதுச் செயலாளருமான அபிஷேக் பானர்ஜியும் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். தங்களது அணியே உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் என்று பிரகடனப்படுத்தியுள்ள இந்த அதிருப்தி குழு, புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்துள்ளது.
அதன்படி, முன்னாள் கொல்கத்தா மேயர் ஃபிர்ஹாத் ஹக்கிம், அரூப் பிஸ்வாஸ், ரதின் கோஷ், சபினா யாஸ்மின் ஆகியோர் துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுச் செயலாளர்களாக ரிதாபிரதா பானர்ஜி, சந்தீபன் சாஹா, ஜாவேத் கான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், மம்தா பானர்ஜி விரும்பினால் கட்சியின் தலைமை ஆலோசகர் என்ற பதவியை ஏற்கலாம் என்றும் அதிருப்தி குழுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் மற்றும் புதிய செயற்குழு குறித்த விவரங்களை முறைப்படி இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்து, கட்சியின் பெயரையும் சின்னத்தையும் தங்களுக்கு ஒதுக்குமாறு கோர உள்ளதாக அதிருப்திக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த மாற்றம் குறித்து மம்தா பானர்ஜியின் தீவிர ஆதரவாளரான குணால் கோஷ், “இந்த நிகழ்வுகள் ஒரு நகைச்சுவை நாடகம். திரிணாமுல் காங்கிரஸ் என்றால் அது மம்தா பானர்ஜிதான். அவர் இல்லாமல் கட்சி இல்லை. கட்சியைவிட்டு நீக்கப்பட்ட ஒரு நபர் இதுபோன்ற கூட்டங்களை நடத்துகிறார். இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது, அங்கு நீதி வெல்லும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போதுள்ள சூழலில், திரிணாமுல் காங்கிரஸின் ஒட்டுமொத்த 80 எம்எல்ஏக்களில் சுமார் 65 பேர் ரிதாபிரதா பானர்ஜியின் அதிருப்தி முகாமிற்கு ஆதரவளிப்பதாகக் கூறப்படுகிறது. மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக 15 எம்எல்.ஏக்கள் மட்டுமே தற்போதைக்கு உள்ளனர்.

