விவிபாட் விவகார வழக்கில் உச்சநீதிமன்றம் அதிருப்தி
வாக்குகள் எண்ணும்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள், ஒப்புகைச் சீட்டுடன் நூறு சதவிகிதம் வரை பொருந்தும் வகையில் இருக்க வேண்டும் என உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இந்நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், ஆகவே முறையாக வாக்குகளை எண்ணுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இந்தச் சூழலில் வாக்குகள் எண்ணும்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும், ஒப்புகைச் சீட்டும் நூறு சதவீதம் பொருந்த வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், இதனை அமல்படுத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரியும் சென்னையை சேர்ந்த ‘டெக் ஃபார் ஆல்’என்ற அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது.
இதை விசாரித்த விடுமுறை கால நீதிபதி அருண் மிஸ்ரா அடங்கிய அமர்வு, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஏற்கெனவே தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடங்கிய அமர்வு இது போன்ற மனுவைத் தள்ளுபடி செய்திருக்கும் நிலையில், மீண்டும் அதே விசயத்தை வலியுறுத்தி வழக்குத் தொடர்வதா என்றும் உச்சநீதிமன்றம் கடிந்து கொண்டது.