”2 பேருமே கொள்ளையடிக்கிறீங்க“: ட்ராயிடம் ஏர்டெல் - ஜியோ மாறிமாறி புகார்! களத்தில் குதித்த டாடா பிளே!

'ஏர்டெல்லின் ஒரே கவலை, ஜியோ ஃபைபர் வாடிக்கையாளர்களுக்கு நியாயமான கட்டணங்களை வழங்குகிறது என்பதுதான்' என்று பதிலடி கொடுத்துள்ளது ஜியோ நிறுவனம்.
airtel and jio
airtel and jio File Photo

ஜியோவின் புதிய சலுகை

நாட்டின் முன்னணி ஃபைபர் இணைய சேவை வழங்குநராக ஜியோ ஃபைபர் உள்ளது. இதில் அதிவேக இணைய சேவை மட்டுமில்லாமல், பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி, பிரபல ஓடிடி தளங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களை ஜியோ செயலி மூலமாக பெற முடியும். மேலும், பிராட்பேண்ட் பிரிவில் கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில், ஜியோ நிறுவனம் மலிவு விலையில் மாதாந்திர சலுகையை அறிவித்து வருகிறது. பிராட்பேண்ட் பேக்கப் பெயரில் அறிவிக்கப்பட்டு இருக்கும் இந்த சலுகையில் நொடிக்கு 10 மெகாபைட் வேகத்தில் இணைய சேவை வழங்கப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோ Vs பாரதி ஏர்டெல்.. போட்டியும் புகாரும்!

சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் போட்டி நிறுவனமான பாரதி ஏர்டெல் தனது மொபைல் சேவை, ஃபைபர் சேவை மற்றும் DTH கட்டணங்களை மாற்றியமைத்தது. பிரீபெயிட் பிரிவில் துவக்க சலுகைகளின் விலையை ஏர்டெல் அதிகரித்தது. மேலும், இந்தத் திட்டங்களில் டிஸ்னி, அமேசான், நெட்ஃபிலிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி தளங்களுக்கான இலவச சந்தாவும் இணைத்தது. இதையடுத்து போட்டியை சமாளிக்க ஜியோ நிறுவனம் மிக குறைந்த விலையில் பிராட்பேண்ட் பேக்கப் சலுகையை அறிவித்தது. அதன்படி, பிரபல 550க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களை ஜியோ செயலி மூலமாக பெற முடியும்.

ஜியோ நிறுவனத்தின் இந்த சலுகை அறிவிப்பு ஆனது முறையற்ற வர்த்தகம் என விமர்சித்துள்ள ஏர்டெல் நிறுவனம், ஜியோ நிறுவனத்துக்கு எதிராக இந்தியாவின் டெலிகாம் துறையை நிர்வகிக்கும் டிராய் அமைப்புக்கு புகார் அனுப்பியுள்ளது. அந்த புகாரில் ஜியோ நிறுவனத்தின் அறிவிப்பு தொலைத்தொடர்பு கட்டண ஆணை (TTO) 1999க்கு எதிரானது என்றும் இவ்விவாகரத்தில் டிராய் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் எனவும் ஏர்டெல் குறிப்பிட்டுள்ளது.

ஏர்டெல் புகாரும் ரிலையன்ஸ் ஜியோவின் பதிலும்!

ஆனால், ஏர்டெல் நிறுவனம் தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டை மறுத்துள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் (ஆர்ஐஎல்) தொலைத்தொடர்பு பிரிவு, கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி டிராய் அமைப்புக்கு பதில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அக்கடிதத்தில், வாடிக்கையாளர்களின் நலனுக்காக எங்கள் நிறுவனம் கொடுக்கும் திட்டங்களை ஏர்டெல் வேண்டுமென்றே இழிவுபடுத்துகிறது. எனவே அற்பமான புகார்களை கொடுக்கக் கூடாது என்று ஏர்டெல்லை டிராய் எச்சரிக்க வேண்டும். ஏர்டெல்லின் ஒரே கவலை என்னவென்றால், ஜியோஃபைபர் வாடிக்கையாளர்களுக்கு நியாயமான கட்டணங்களை வழங்குகிறது என்பதுதான்'' என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய இரு நிறுவனங்களும் டிராய் அமைப்பிடம் அடிக்கடி மாறிமாறி புகார் கொடுப்பது தொலைத்தொடர்பு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

”நீங்க ரெண்டு பேரும் கொள்ளையடிக்கிறீங்க” - டாடா பிளே

இதற்கிடையில் ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ மீது டாடா பிளே குற்றம்சாட்டியுள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களும் கொள்ளையடிக்கும் விலையில் திட்டங்களை போட்டி போட்டு அறிவித்து வருவதாக ட்ராயிடம் டாடா பிளே புகார் கடிதம் அளித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com