அரசியல்ல இதெல்லாம்...16 வருடத்தில் 30 டிரான்ஸ்பர்! இது ரூபாவின் பயணம்
பெங்களூரு சிறை முறைகேடுகள் பற்றி புகார் கூறிய போலீஸ் டி.ஐ.ஜி. ரூபா, 16 வருடத்தில் 30 முறை டிரான்ஸ்பரை சந்தித்துள்ளார்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு தனி சமையலறை உட்பட சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது பற்றி டி.ஜி.பி. சத்யநாராயண ராவுக்கு கடிதம் மூலம் புகார் தெரிவித்தார் ரூபா. இதற்காக டிஜிபி ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாகவும் பரபரப்பு புகார் கூறியதை அடுத்து, இவருக்கு பாராட்டுகள் குவிகிறது.
கர்நாடக சிறைத்துறையின் முதல் போலீஸ் பெண் அதிகாரியான ரூபா, பணியில் சேர்ந்து 16 ஆண்டுகள் ஆகிறது. பணியில் கண்டிப்புடன் இருப்பதால் இவர் பல எதிர்ப்புகளை சந்தித்துள்ளார். 30க்கும் அதிமான முறை பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். முதல் முறையாக மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள யாதவகிரி மாவட்டத்தில் நியமனம் செய்யப்பட்டார். இவர் தனது மொத்த அரசு பணி சேவையில் பெரும்பாலான பகுதியை வட கர்நாடகத்தில் பணியாற்றியுள்ளார். அது அடிப்படை வசதிகள் குறைவான பகுதி. இதனால் அது அரசு ஊழியர்களுக்கு தண்டனை பகுதியாம்.
கடந்த 2004 ம் ஆண்டு இப்போதைய மத்திய அமைச்சர் உமாபாரதி, சர்ச்சைக்குரிய உப்பள்ளியில் உள்ள ஈத்கா மைதானத்தில் கொடி ஏற்ற முயற்சி செய்தார். ரூபா அவரை துணிச்சலாக கைது செய்தது அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. கதக் மாவட்டத்தில் பணியாற்றியபோது, அங்கு ஏற்பட்ட கலவரத்தில் தொடர்புடைய முன்னாள் எம்.எல்.ஏ. யாவகல் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தார். இதுவும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படி பல துணிச்சல் காரியங்களை செய்தவர் ரூபா.
இவர் கர்நாடகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் இவர் கணவர் முனித் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி. தனது பெண் குழந்தையை அரசு பள்ளியிலேயே படிக்க வைத்தவர் ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.

