சமூக ஊடகங்களில் எதைப் பதிவிட வேண்டும் என்பதை அரசு தீர்மானிப்பதா? மகாராஷ்டிரா அரசு கேள்வி!
‘சமூக வலைத்தளங்கள்' மற்றும் 'ஓடிடி’ தளங்களுக்கு மத்திய அரசு கொண்டுவந்துள்ள நடைமுறைகள் சா்வாதிகாரப் போக்குடையது’ என்று விமர்சித்துள்ளது மகாராஷ்டிரா மாநில அரசு.
சமூக வலைதளங்கள், ஓடிடி ஆகிய டிஜிட்டல் தளங்களுக்கு புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகளை வெளியிட்டிருக்கிறது மத்திய அரசு. அதன்படி, சமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்களில் சா்ச்சைக்குரியதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டும் பதிவுகளை 36 மணி நேரங்களுக்குள் நீக்கிவிட வேண்டும். மேலும், குறைகளை உடனக்குடன் நிவா்த்தி செய்யும் வகையில், சமூக ஊடக நிறுவனங்கள் இந்தியாவில் ஒரு அதிகாரி தலைமையில் குறைதீர் நடைமுறையை செயல்படுத்த வேண்டும். அதுபோல, அவதூறான செய்தியை முதலில் பரப்பும் நபரை சமூக வலைதளங்கள் கண்டறிய வேண்டும். நீதிமன்றங்கள், அரசுக்கு, அந்த பயனரின் தகவல்களை வழங்க வேண்டும் என்பதையும் மத்திய அரசின் இந்த புதிய நடைமுறையில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடுகளுக்கு மகாராஷ்டிரா மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் சட்டெஜ் பாட்டில் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இதுபோன்ற சா்வாதிகார நடைமுறையை ஜனநாயக நாட்டின் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சமூக ஊடகங்களில் எதைப் பதிவிட வேண்டும், எதைப் பதிவிடக் கூடாது என்பதை ஒரு சில அதிகாரிகள் தீர்மானிப்பது என்பது, இந்தியாவின் கருத்து சுதந்திரத்தின் மீதான மிகப் பெரிய தாக்குதலாகும். திஷா ரவி கைது நடவடிக்கையைப் பொருத்தவரை, கருத்துச் சுதந்திரத்தை வெளிப்படுத்துபவா்களின் குரல்வலையை நசுக்கும் நடவடிக்கையாகும்’ என்று அவர் கூறினார்.